மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி, நாகா சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு கடந்த 2 மாதங்களாக கலவரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல்வர் பிரேன்சிங் கூறியதாவது: மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அனைத்து நிலைகளிலும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். சில மணி நேரங்களுக்கு முன்பு கூட குகி சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது, “மறப்போம், மன்னிப்போம், சமரசம் செய்து கொள்வோம், எப்போதும் போல அனைவரும் இணைந்து வாழ்வோம்” என்று அவர்களிடம் தெரிவித்தேன். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட முன்னுரிமை வழங்கி வருகிறோம்.
மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டோமோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. இதை நினைத்தபோது எனக்கு மனவேதனை ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு ஒரு சந்தையில் இருந்தவர்கள் என்னை பற்றி அவதூறு பேசினர். அது எனக்கு வேதனையாக இருந்தது. அதனால்தான் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தேன். ஆனால் ஏராளமானவர்கள் தெருவில் இறங்கி எனக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் பதவி விலகவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். எனவே ராஜினாமா முடிவை நான் கைவிட்டேன்.
நாம் அனைவரும் ஒன்றுதான். மணிப்பூர் சிறிய மாநிலம். ஆனால் இங்கு 34 பழங்குடி சமூகத்தினர் வசிக்கின்றனர். நாம் அனைவரும் இணைந்து வாழ்வோம். மணிப்பூர் மாநிலம் உடைய அனுமதிக்க மாட்டேன் என முதல்வராக நான் உறுதி கூறுகிறேன். அனைவரும் இணைந்து வாழ நான் தியாகம் செய்யத் தயாராக உள்ளேன். இந்த சம்பவத்தில் வெளிநாட்டு சதி இருக்கிறதா என்பதை மறுக்கவும் முடியவில்லை உறுதியாக கூறவும் முடியவில்லை. அதேநேரம் மணிப்பூருக்கு பக்கத்தில் மியான்மர் நாடு உள்ளது. அதற்கு பக்கத்தில் சீனா உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.