பயங்கரவாதிகள் பணம் வசூலிக்க டிஜிட்டல் முறை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பணம்  வசூலிக்க சமூக ஊடகங்கள், டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் பயங்கரவாதிகள். அவர்களிடம் இருந்து பணம் பெறுவதற்காக போன் பே, கூகுள் பே, பே டி எம்  போன்ற டிஜிட்டல் முறையை பயன்படுத்தி வந்தனர். இது தடை செய்யப்பட்ட திரிதியா சம்மேளன பிரஸ்துதி கமிட்டியின் (டிஎஸ்பிசி) மூன்று உறுப்பினர்களை திங்கள்கிழமை காவல்துறை கைது செய்யப்பட்ட போது தெரிய வந்தது. மேலும் அவர்கள் காவல்துறை கண்காணிப்பைத் தவிர்க்க வாட்ஸ்அப் அழைப்புகளைப் பயன்படுத்தி வந்தனர் என்பதும் தெரிந்தது.

அந்த மூவரும் டிஎஸ்பிசியின் பகுதி கமாண்டர் சம்பு சிங்,  மிதிலேஷ் யாதவ், சத்யேந்திர சிங் என அடையாளம் காணப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, 8 மிமீ கார்ட்ரிட்ஜ், மூன்று ஸ்மார்ட்போன்கள், டிஎஸ்பிசி துண்டுப் பிரசுரங்கள், தொலைபேசி எண்கள் அடங்கிய டைரி ஆகியவை மீட்கப்பட்டன என்று பிஷ்ராம்பூர் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி  சுஜித் குமார் தெரிவித்தார்.