திருப்பரங்குன்றம் கோயில் மலையில் தொழுகைக்கு தடை கோரி வழக்கு

பக்ரீத் பண்டிகையையொட்டி, மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சொந்தமான மலையில் பாதையை மறைத்து, நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தடை கோரிய வழக்கில், அறநிலையத்துறை கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலர் ராமலிங்கம் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. திருப்பரங்குன்றம் மலை இக்கோவிலுக்கு சொந்தமானது.

பக்தர்கள் பழனியாண்டவர் வீதி வழியாக மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்வர். மலையின் மத்திய பகுதியான நெல்லித்தோப்பில் ஓய்வெடுப்பர். பின் அக்கோவிலுக்கு செல்வர். மலை மீது சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது. வழக்கமாக பள்ளிவாசலில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்தனர். தர்கா நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம்கள் ஏப்., 22ல் ரம்ஜான் பண்டிகையன்று நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்தினர். தர்கா அல்லது அருகிலுள்ள காலி இடத்தில் தொழுகை நடத்தாமல் பக்தர்கள் சென்று வரும் பாதையை மறைத்து நடத்தினர்.திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான மலையை சிக்கந்தர் மலை என்றும், சிக்கந்தர் மலை மீது இனி தொடர்ந்து தொழுகை நடத்துவோம் எனவும் அறிவிப்பு செய்தனர். பக்ரீத் பண்டிகையையொட்டி கோவிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தர்கா நிர்வாகிகள் முயற்சிக்கின்றனர். தடை விதிக்க வேண்டும். இவ்வாறு ராமலிங்கம் குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு, இந்த விவகாரம் குறித்து, அறநிலையத்துறை கமிஷனர், திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு, நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.