பொது சிவில் சட்டம் குறித்து மதச்சாயம் பூசும் எதிர்க்கட்சிகள்

ராஜஸ்தானின் ஜோத்பூரில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், அரசிய லமைப்பில் என்ன கூறப்பட்டுள்ளதோ, அதன்படியே நாங்கள் செயலாற்றுகிறோம். பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுவோம். ஒரே தேசத்துக்கு ஒரே சட்டம் வேண்டாமா? ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளும் சுதந்திரம் அனுமதிக்கப்படாது என்பதை உறுதியுடன் கூறுகிறேன். பொது சிவில் சட்டம் தொடர்பான எங்களது செயல்பாட்டில் என்ன தவறு உள்ளது? நாங்கள் பெண்களை கெளரவப்படுத்துகிறோம். எதிர் கட்சிகள் தங்களின் ஓட்டு வங்கிக்காக மத்திய அரசு எதை செய்தாலும் அதற்கு மதச்சாயம் பூசுகின்றனர். சமூகத்தை பிளவுபடுத்துவதாக அரசியல் இருக்கக் கூடாது; மாறாக, சமூகம் மற்றும் நாட்டை ஒருங்கிணைப்பதாக இருக்க வேண்டும் என்றார் ராஜ்நாத் சிங்.

நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது அவசியம் என்ற பிரதமர் மோடியின் வலியுறுத்தலுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் வரவேற்பு தெரிவித்துள்ளது. ‘அரசமைப்புச் சட்டத்தின் 44-ஆவது பிரிவு, பொது சிவில் சட்டத்தை விரைந்து உருவாக்கும் மத்திய அரசின் முயற்சிகளை அனுமதிக்கிறது. குற்றவியல் சட்டம், ஒப்பந்த சட்டம், வர்த்தக சட்டம், வங்கி சட்டம் ஆகியவை அனைவருக்கும் ஒரே சீராக இருக்கும்போது, குடும்ப சட்டங்களுக்கு மட்டும் விதிவிலக்கு ஏன்?’ என்று அந்த அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது. இதுவரை 8.5 லட்சம் கருத்துகள்: பொது சிவில் சட்டம் குறித்து பல்வேறு தரப்பினரிடம் சட்ட ஆணையம் கருத்துகள் வந்துள்ள நிலையில், மேலும் கருத்துகள் பெறப்பட்டுள்ளதாக ஆணையத்தின் தலைவரான நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி புதன்கிழமை தெரிவித்தார்.