ஆவினில் பால் மற்றும் பால் பொருட்கள் கொள்முதலில், 2018–19ம் ஆண்டு, 38 கோடி ரூபாய்; 2019–20ம் ஆண்டு, 79 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளன. அனுமதியின்றி தனியார் நிறுவனங்களுக்கு பால் வழங்கியது, கையிருப்பில் இருந்த வெண்ணெய் காணாமல் போனது, ஐஸ்கிரீம் காலாவதியானதாக கணக்கு காட்டியது, தனியார் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் நெய் வழங்கியது, விளம்பரங்கள் வெளியீடு உள்ளிட்டவை முறைகேடுகளுக்கு காரணம். சிவகங்கை, திருச்சி, மதுரை, ஈரோடு, சேலம், தர்மபுரி, விருதுநகர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திண்டுக்கல், வேலுார், கோவை ஆகிய மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில், இந்த முறைகேடு நடந்துள்ளன. பால்வளத்துறை தணிக்கையில், இந்த முறைகேடு அம்பலமானது.
தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், விரிவான விசாரணை நடத்த, மாவட்ட துணை பதிவாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், முறைகேடு நடக்கவில்லை என, பலரும் அறிக்கை கொடுத்தனர். இதற்காக, முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகளிடம், துறையின் முன்னாள் முக்கிய புள்ளி தரப்பில், பல லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் அவரிடம் இருந்து துறை பறிக்கப்பட்டு, புதியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த முறைகேடுகளை துாசி தட்டும் நடவடிக்கை மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தினால், தணிக்கை அறிக்கையில் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் தவறா அல்லது விசாரணை முறையாக நடக்கவில்லையா என்பது தெரியும்.