2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹானில் மனிதர்களிடம் ‘கோவிட்-19’ என்னும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின், சீனா மட்டுமல்லாமல் படிப்படியாக உலக நாடுகள் முழுவதும் இந்த வைரஸ் பரவியது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு அதில் ஏராளமானோர் கொத்துக்கொத்தாக உயிரிழந்தனர்.
மனிதர்கள் சந்தித்த மிகப்பெரிய அழிவை இந்த கோவிட் தொற்று ஏற்படுத்தியது. இதற்கிடையே இது வூஹானில் உள்ள வைரஸ் குறித்த ஆய்வகத்தில் இருந்துதான் வெளியேறியதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டின. இதனால், சீனா இந்த வைரஸை ‘உயிரி ஆயுதமாக’ பயன்படுத்தி இருக்கலாம் எனவும் கருத்துகள் எழுந்தன.
இந்த நிலையில் சீனா மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய தனிப்பட்ட தகவல் மற்றும் நுண்ணறிவுகளை வழங்கும் சர்வதேச செய்தியாளர் சங்கத்தின் உறுப்பினரும், சீனாவில் பிறந்த மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான ஜெனிபர் ஜெங், வூஹானை சேர்ந்த ஆராய்ச்சியாளர் சாவோ ஷாவோ என்பவரிடம் ஒரு பிரத்யேக நேர்காணல் நடத்தினார். இதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை சாவோ ஷாவோ வெளிப்படுத்தினார். நேர்காணலில் சாவோ ஷாவோ கூறியதாவது:
கொரோனா வைரஸ் ஒரு ‘உயிரி ஆயுதம்’. வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியைச் சேர்ந்த மற்றொரு ஆராய்ச்சியாளரும் என்னுடைய மேலதிகாரியுமான ஷான் சாவோ, என்னிடம் நான்கு கொரோனா வைரஸ் மாதிரிகளை வழங்கினார். அதில், அதிக வீரியமான மற்றும் மனிதர்கள், மற்ற உயிரினங்களை எளிதாகவும், அதிக தொற்றும் திறனாகவும் கொண்டது எந்த வைரஸ் என்பதை கண்டறியுமாறு கூறினார்.
2019ல் வூஹானில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ராணுவ விளையாட்டு போட்டிகளின்போது என் சக பணியாளர்கள் (வைரஸ் ஆராய்ச்சியாளர்கள்) தடகள வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றதாக தெரியவந்தது. ஏனென கேட்டபோது, வீரர்களின் உடல்நிலையை சோதிக்க சென்றதாக கூறினர். வீரர்களின் உடல்நிலையை அறிய வைராலஜி ஆராய்ச்சியாளர்கள் தேவையில்லை. வைரஸை வீரர்களிடம் பரப்புவதற்காகவே அவர்கள் அங்கு அனுப்பப்பட்டதாக ஷான் சாவோ கூறினார்.
அதன் பின்னர் 2020ம் ஆண்டு ஏப்ரலில், ஷான் சாவோ, முகாம்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உய்குர் முஸ்லீம்களின் உடல்நிலையைப் பரிசோதிப்பதற்காக ஷின்ஜியாங்கிற்கு அனுப்பப்பட்டார். வைரஸை மனிதர்களுக்கு பரப்பி, அது எவ்வாறு வேலை செய்கிறது என்பதைக் கவனிப்பதற்காக அங்கு அனுப்பப்பட்டதாக அவரே உறுதியாக குறிப்பிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
வூஹான் ஆராய்ச்சியாளர் சாவோ ஷாவோ அளித்த இந்த தகவல்களால் ‘கோவிட்-19’ வைரஸை ‘உயிரி ஆயுதமாக’ உருவாக்கி, உலகம் முழுவதும் ‘உயிரி பயங்கரவாதமாக’ பயன்படுத்த சீனா முயற்சித்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.