பீஹாரில் பொது இடத்தில் சிகரெட் பிடித்த மாணவனை, பள்ளியில் வைத்து ஆசிரியர்கள் சரமாரியாக அடித்து உதைத்ததில், அந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து, அந்த பள்ளிக்கு போலீசார், ‘சீல்’ வைத்துள்ளனர்.
பீஹாரில், கிழக்கு சாம்ப்ரான் மாவட்டம் மதுபான் என்ற பகுதியைச் சேர்ந்த பஜ்ரங்கி குமார், 15, அதே பகுதியில் உள்ள விடுதியுடன் கூடிய பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தான். கோடை விடுமுறை என்பதால் கடந்த ஒரு மாதமாக வீட்டில் இருந்த பஜ்ரங்கி, நேற்று முன்தினம் காலை, அருகில் உள்ள கடைத் தெருவுக்கு நண்பர்களுடன் சென்றான்.
அப்போது, நண்பர்களுடன் சேர்ந்து, அவன் சிகரெட் பிடித்ததை, பள்ளியின் நிர்வாகி வினய் குமாரும், மற்றொரு ஆசிரியரும் பார்த்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் பஜ்ரங்கியை பள்ளிக்கு வலுக்கட்டாயமாக அடித்து இழுத்துச் சென்றனர். அங்கு வினய் குமாரும், மற்ற ஆசிரியர்களும் சேர்ந்து, பஜ்ரங்கியை பெல்டால் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. அடி தாங்க முடியாமல் பஜ்ரங்கி மயங்கி விழுந்ததை அடுத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். ஆனால், சிறிது நேரத்திலேயே பஜ்ரங்கி இறந்து விட்டான். தகவல் அறிந்து வந்த பஜ்ரங்கியின் தாயும், உறவினர்களும், ஆசிரியர்கள் தாக்கியதால் பஜ்ரங்கி இறந்ததாக புகார் தெரிவித்தனர். சிறுவனின் கழுத்து, மர்ம உறுப்பு போன்றவற்றில் ரத்த காயங்கள் இருப்பதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.
இதை மறுத்துள்ள பள்ளி நிர்வாகி வினய் குமார், ”சிகரெட் பிடித்தது வீட்டிற்கு தெரிந்து விடும் என்பதால், பயத்தில் சிறுவன் விஷம் குடித்துள்ளான், அதனால் தான், அவன் இறந்துள்ளான். எங்கள் மீது பொய் புகார் கொடுத்துள்ளனர்,” என்றார். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘அந்த பள்ளிக்கு, சீல் வைக்கப்பட்டுள்ளது. சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்ததும், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.