பிஆர்எஸ்ஸிலிருந்து 12 முன்னாள் அமைச்சர்கள் ஓட்டம்

தெலுங்கானாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆளும் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியைச் சேர்ந்த, 12 முன்னாள் அமைச்சர்கள் உட்பட, மூத்த நிர்வாகிகள் 34 பேர் நேற்று, அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தனர்.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. பா.ஜ.,வுக்கு மாற்றாக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் அடங்கிய பிரமாண்ட கூட்டணியை அமைக்கும் முயற்சியில், கடந்த சில மாதங்களாக சந்திரசேகர ராவ் ஈடுபட்டு வந்தார். இதற்காக பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று அரசியல் கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்தி வந்தார்.

இந்நிலையில், சமீப காலமாக பா.ஜ.,வை எதிர்க்கும் நடவடிக்கைகளை கைவிட்டுள்ள சந்திரசேகர ராவ், அடக்கி வாசித்து வருகிறார். சமீபத்தில் பீஹார் மாநிலம் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் சந்திரசேகர ராவ் பங்கேற்கவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த தெலுங்கானா அமைச்சரும், சந்திரசேகர ராவின் மகனுமான ராமாராவ், ‘சட்டசபை தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம். பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம், பா.ஜ.,வை எதிர்ப்பதை மட்டுமே ஒரே நோக்கமாக வைத்து நடந்தது. ‘அவர்களுக்கு பொது நலன் இல்லை’ என்றார்; இது, அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தெலுங்கானா சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் ஆகியோர் நேற்று புதுடில்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசித்தனர். அப்போது பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் முன்னாள் எம்.பி., ஸ்ரீனிவாச ரெட்டி, முன்னாள் அமைச்சர் கிருஷ்ணா ராவ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேஷ்வரலு, கோலா ராம் பாபு, ராகேஷ் ரெட்டி உள்ளிட்ட, 34 நிர்வாகிகள், அந்த கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தனர். இவர்களில், 12 பேர் முன்னாள் அமைச்சர்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் 34 பேர், காங்கிரசில் இணைந்தது, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.