மூலதன முதலீடு: தமிழ்நாட்டுக்கு ரூ.4,079 கோடி நிதி –மத்திய அரசு

மூலதன முதலீட்டுக்காக தமிழகத்துக்கு ரூ.4,079 கோடி நிதியை மத்திய நிதியமைச்சகம் ஒதுக்கியுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சிறப்பு உதவி திட்டத்தின் கீழ்நடப்பு நிதியாண்டில் 16 மாநிலங்களுக்கு ரூ.56,415 கோடி முதலீட்டுதிட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய நிதி அமைச்சகம் ஒப்புதலை வழங்கியுள்ளது. அதன்படி, தமிழகத்துக்கு ரூ.4,079 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.7,523 கோடியும், தெலங்கானாவுக்கு ரூ.2,102 கோடியும், பிஹாருக்கு ரூ9,640 கோடியும், குஜராத்துக்கு ரூ.3,478 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.3,647 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், அருணாசல பிரதேச மாநிலத்துக்கு ரூ.1,255 கோடியும், சத்தீஸ்கருக்கு ரூ.3,195 கோடியும்,கோவாவுக்கு ரூ.386 கோடியும்,ஹரியாணாவுக்கு ரூ.1,093 கோடியும், இமாச்சல பிரதேசத்துக்கு ரூ.826 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.7,850 கோடியும், மிஸோரத்துக்கு ரூ.399 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.4,528 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.6,026 கோடியும், சிக்கிம் மாநிலத்துக்கு ரூ.388 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

மாநிலங்களின் மூலதனச் செலவினங்களை அதிகரிப்பதற்காக 2023-–-24 மத்திய பட்ஜெட்டில் சிறப்பு உதவி திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2023–-24 நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.1.3 லட்சம் கோடி 50 ஆண்டு வட்டியில்லா கடனாக மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம், நீர் வழங்கல், மின்சாரம், சாலைகள், பாலங்கள் மற்றும் ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மூலதன முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட் டுள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டுக்கு மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கு சிறப்பு உதவி திட்டத்தின் கீழ், ரூ.95,147.19 கோடி மூலதன முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ.81,195.35 கோடி விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.