தண்டவாளத்தில் கான்கிரீட் கற்கள்; ரயிலை கவிழ்க்க சதி?

வேலுார் அருகே தண்டவாளத்தில் கான்கிரீட் கற்களை வைத்து, ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா என, ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். வேலுார் மாவட்டம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக தினமும், 120 ரயில்கள் இயக்கப்படுகின்றன. நேற்று அதிகாலை, 3:45 மணிக்கு மைசூரிலிருந்து சென்னைக்கு காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் ஸ்டேஷன் அருகே, வீரவர் கோவில் என்ற இடத்தில், தண்டவாளத்தில் கான்கிரீட் சிமென்ட் கல் மற்றும் கருங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.அவற்றை மிக அருகில் சென்ற பிறகே டிரைவர் கவனித்துள்ளார்.

உடனடியாக நிறுத்த முடியாததால், இன்ஜின் சிமென்ட் கற்களை நொறுக்கியபடி சென்றது. ரயில் பெட்டிகளின் சக்கரங்களும் கற்கள் மீது ஏறியதால், பயங்கர சத்தம் எழுந்து, பயணியர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, ரயிலை மெதுவாக இயக்கிய டிரைவர், பச்சகுப்பம் ஸ்டேஷனில் நிறுத்தினார். அங்கிருந்து ஆம்பூர், ஜோலார்பேட்டை ஸ்டேஷன்களுக்கு தகவல் தெரிவித்தார். இதனால், இன்ஜினில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டிருந்தது. ஆய்வுக்கு பின், 15 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது. ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், தண்டவாளத்தில் அடுக்கி வைத்திருந்த கற்களை பார்வையிட்டனர். சென்னையிலிருந்து வந்த ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். தண்டவாளத்தில் கல் வைத்து, ரயிலை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.