இஸ்லாமுக்கு மாற துன்புறுத்தல் மூவரின் வீட்டை இடிக்க உத்தரவு

ஹிந்து இளைஞரின் கழுத்தில், ‘பெல்ட்’ கட்டி, நாயைப் போல் குரைக்கச் சொல்லி, அடித்து துன்புறுத்தியதுடன், இஸ்லாம் மதத்துக்கு மாறும்படி கட்டாயப்படுத்திய, மூன்று பேரின் வீடுகளை இடிக்க, மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தலைநகர் போபாலைச் சேர்ந்த விஜய் ராமசந்தானி என்ற இளைஞரை, மூன்று முஸ்லிம் இளைஞர்கள் அடித்து துன்புறுத்தும், ‘வீடியோ’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமசந்தானியின் கழுத்தில் பெல்ட் கட்டி, நாயைப் போல் குரைக்கும்படி, முஸ்லிம் இளைஞர்கள் அடித்து துன்புறுத்தினர். மேலும், ராமசந்தானியின் சட்டைப் பையில் இருந்த பணத்தையும், மொபைல்போன்களையும் பறித்துள்ளனர். அவருடைய குடும்பத்தார் குறித்து அவதுாறாக பேசியதுடன், முஸ்லிம் மதத்துக்கு மாறும்படி கட்டாயப்படுத்தினர். இதற்கிடையே ராமசந்தானியின் குடும்பத்தாரை மொபைல்போனில் அழைத்தும் அந்த இளைஞர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, சமீர், சாஜித், பைசான் லால் ஆகிய மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது, மிகக் கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டம், மதமாற்ற தடுப்புச் சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குறைந்த பட்சம், ஒரு ஆண்டு சிறையில் அடைக்கப்படுவர். மேலும், இந்த இளைஞர்களின் பின்புலத்தை விசாரிக்கும்படியும், அவர்களுடைய வீடுகளை இடிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.