சுரினாம் நாட்டில் இந்தியர்கள் வந்து 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் ஜூன் 5, அன்று நடைபெற்ற கலாசார விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, சுரினாம் நாட்டின் அதிபர் சந்திரிகாபெர்சாத் சாந்தோகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பராமரிபோவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய குடியரசுத்தலைவர், 1873-ஆம் ஆண்டு இதே தினத்தன்று இந்தியர்கள் குழு ஒன்று லல்லா ரூக் கப்பலில் சுரினாம் கடற்கரையை வந்தடைந்தது, இந்த நாட்டின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தின் துவக்கமாக அமைந்தது என்று கூறினார். கடந்த 150 ஆண்டுகளில் இந்திய சமூகத்தினர் சுரினாம் நாட்டில் முக்கிய அங்கம் வகிப்பதோடு, இந்தியா மற்றும் சுரினாம் இடையேயான ஆழ்ந்த கூட்டணியின் தூணாகவும் விளங்குகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியப் பகுதிகளில் இருந்து சுரினாமுக்கு குடி பெயர்ந்த இந்திய வம்சாவளியினருக்கு வழங்கப்படும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான அட்டையை நான்காவது தலைமுறையிலிருந்து ஆறாவது தலைமுறையாக நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்தார். இந்தியாவுடனான 150 ஆண்டு பழமை வாய்ந்த உறவின் முக்கிய இணைப்பாக இந்த அட்டை கருதப்படுகிறது என்றார் அவர். இந்தியாவுடனான தங்களது தொடர்பை வலுப்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு இந்திய வம்சாவளியினரை அவர் வலியுறுத்தினார். இந்திய-சுரினாம் இருதரப்பு உறவுகள், வளர்ச்சிக்கான பகிரப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் அமைந்துள்ளதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.
முன்னதாக, சுரினாம் நாட்டிற்கு முதன் முதலில் வந்த இந்திய ஆண் மற்றும் பெண்ணை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாபா மற்றும் மாய் நினைவுச்சிலைக்கு குடியரசுத்தலைவர் மரியாதை செலுத்தினார். அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிற்கு சுரினாம் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் ஆர்டர் ஆஃப் தி செயின் ஆஃப் தி யெல்லோ ஸ்டார் விருதை அந்நாட்டு அதிபர் சாந்தோகி வழங்கி கவுரவித்தார். இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்த தலைமுறைகள் கடந்த இந்திய-சுரினாம் நாட்டின் மக்களுக்கு இந்த விருதை அவர் அர்ப்பணித்தார். சுரினாம் நாட்டின் அதிபர் வழங்கிய மதிய விருந்து நிகழ்ச்சியிலும் குடியரசுத்தலைவர் கலந்து கொண்டார்.