தஞ்சாவூர் மாவட்டம், பூதலுார் அருகே வெண்டையம்பட்டி பெரிய ஏரியின் வடிகால், 24.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துார் வாரப்பட்டு வருகிறது.இந்த வாய்க்கால் முழுதும் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, அவற்றை அகற்றி, பணிகளை மேற்கொள்ள, பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
மேலும், உள்ளூர் பொதுமக்கள் , இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.பூதலுார் தாசில்தார் பெர்சியா, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் தினேஷ் கண்ணன் ஆகியோரிடம் பேச்சு நடத்தினர்.பின், மே 26 முதல் வருவாய் துறையினர் அளவீடு பணியை துவங்கினர். அப்போது, வெண்டையம்பட்டி பெரிய ஏரி வடிகால் வாய்க்காலின் ஓரத்தில், காங்கேயம்பட்டி பகுதியைச் சேர்ந்த, 34.5 ஏக்கரில் உள்ள கடக்கன் ஏரி, அடையாளமே இல்லாத அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.இதையறிந்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ஏரியின் மெய்க்கால் புறம்போக்கு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.