பெண்களுக்கான மகிளா சம்மான் முதலீடு

‘மகளிர் மதிப்புத் திட்டம்’ என்று அழைக்கப்படும் ‘மகிளா சம்மான் சேமிப்புப் பத்திரம்’ 31.03.2023 அன்று மத்திய நிதி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பெண்களுக்கு நிதி அதிகாரமளிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டது. அதிக வட்டி விகிதத்தை வழங்குவதன் மூலம், இந்தத் திட்டம், பெண்கள் மற்றும் பொது மக்களிடையே விருப்பமான சேமிப்புத் திட்டமாக பிரபலமடைந்துள்ளது. இது இரண்டு வருட திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு பெண் தனக்காகவோ அல்லது மைனர் பெண் குழந்தையின் சார்பாக பாதுகாவலரோ குறைந்தபட்ச தொகை ரூ.1,000ல் இருந்து நூறு ரூபாய்களின் மடங்குகளில் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் கணக்கைத் தொடங்கலாம். இத்திட்டம் 7.5 சதவீத காலாண்டு கூட்டு வட்டியை வழங்குகிறது. 6 மாதங்களுக்குப் பிறகு எந்த நேரத்திலும் நிபந்தனைகளுடன் கணக்கை முடித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. கணக்கைத் தொடங்கி ஒரு வருடத்திற்குப் பின், கணக்கின் இருப்பிலிருந்து 40 சதவீதம் வரை திரும்பப் பெறலாம். மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் ஒரு பாதுகாப்பான முதலீட்டு வழியை வழங்குவதுடன், பெண்களின் சேமிப்பை பெருக்கி நிதி இலக்குகளை அடைவதற்கு உதவுகிறது. 26.05.2023 புள்ளிவிவரப்படி, சென்னை நகர மண்டலம் இத்திட்டத்தின் கீழ் 18,266 கணக்குகளைத் துவக்கி ரூ.134.24 கோடி டெபாசிட் தொகையை பெற்றுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் 31.03.2025 வரை மட்டுமே கணக்குகளை துவங்க முடியும்.