பத்து நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.பியுமான, ராகுல் காந்தி, ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் பாரத வம்சாவளியினருடன் கலந்துரையாடினார். அப்போது அவர், நாடாளுமன்றத்தில் செங்கோலை விழுந்து வணங்கியது மோடி செய்த ஸ்டண்ட் என கூறினார். மேலும், உண்மையான பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே செங்கோல் விவகாரத்தை அவர்கள் கையில் எடுத்துள்ளனர். மக்களை அச்சுறுத்தி வரும் பா.ஜ.க விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது என குறிப்பிட்டார். இந்நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “ராகுல் தனது வெளிநாட்டு பயணத்தின் போது பாரதத்தை தொடர்ந்து அவமதித்து வருகிறார். அதே நேரத்தில் நமது பிரதமர் மோடி, வெளிநாட்டு பயணத்தின் போது கிட்டத்தட்ட 24 பிரதமர்கள் மற்றும் உலக தலைவர்களை சந்தித்து, பாரதத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார். ‘பிரதமர் மோடி தான் பாஸ்’ என்று ஆஸ்திரேலிய பிரதமர் கூறியதை, பாவம், ராகுலால் ஜீரணிக்க முடியவில்லை” என கூறினார்.