தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில், மணல் கொள்ளை, கள்ளச் சாராயம் போன்றவை அதிகரித்துள்ளதுடன் அதனை தடுப்பவர்களும் தகவல் அளிப்பவர்களும் கொல்லப்படுவது, மிரட்டப்படுவது அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு சமூக ஊடகங்களில் மக்களால் முன் வைக்கப்படுகிறது. இந்த சூழலில், அதனை மெய்ப்பிக்கும் விதமாக ஒரு சம்பவம் திருவிடைமருதூரில் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள நரசிங்கம்பேட்டை பச்சன் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் தனபால். கொத்தனார் வேலை செய்து வந்த இவர், வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வழியில் சிறிது நேரம் சாலையில் நின்று அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, 2 இருசக்கர வகனங்களில் வந்த மூன்று மர்ம நபர்கள், திடீரென தனபாலை சுற்றிவளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். தகவலறிந்து அங்கு வந்த அவரது உறவினர்களும், சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களும் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த தனபாலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே தனபால் பரிதாபமாக உயிரிழந்தார். சாராய வியாபாரி குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததால்தான் தனபால் கொலை செய்யப்பட்டதாகக் கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.