புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவரும் ஜனநாயக முற்போக்கு சுதந்திர கட்சியின் நிறுவனத் தலைவருமான குலாம் நபி ஆசாத், எதிர்க்கட்சிகளின் செயல் முற்றிலும் தவறானது. நான் டெல்லியில் இருந்தால், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் நிச்சயம் பங்கேற்பேன். புதிய நாடாளுமன்றம் குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்காக எதிர்க்கட்சிகள் மத்திய அரசை பாராட்ட வேண்டும். ஆனால், அவர்கள் அரசை விமர்சிக்கிறார்கள். நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளின் முடிவை நான் கடுமையாக எதிர்க்கிறேன்” என தெரிவித்தார். இதேபோல, ஸ்ரீநகர் முனிசிபல் கார்ப்பரேஷனின் மேயர் ஜுனைத் அசிம் மாட்டு உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பல தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளின் முடிவை ‘குழந்தைத்தனமானது மற்றும் அற்பமானது’ என்று விமர்சித்தனர்.