கர்நாடக மாநில அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரின் மகனுமான பிரியங்க் கார்கே, “கர்நாடக மாநிலத்தின் அமைதியை சீர்குலைந்தால், அது பஜ்ரங்தளமா அல்லது வேறு எந்த சங் பரிவார அமைப்பா என்பதை நாங்கள் கருத்தில் கொள்ள மாட்டோம். யாராவது சட்டத்தை மீறினால் அவர்கள் நாட்டின் சட்டத்தின்படி நடத்தப்படுவார்கள். பா.ஜ.க தலைமை அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருதினால், அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம். பா.ஜ.க அரசால் நிறைவேற்றப்பட்ட பசுவதைத் தடுப்பு மற்றும் மதமாற்றத் தடைச் சட்டங்கள் உட்பட அனைத்துச் சட்டங்களையும் நாங்கள் மதிப்பாய்வு செய்வோம். ஹிஜாப் உத்தரவு மற்றும் பாடப் புத்தகங்களின் திருத்தம் ஆகியவற்றையும் மதிப்பாய்வு செய்வோம். இந்தச் சட்டங்களில் ஏதேனும் சர்ச்சைக்குரியதாகவோ, வகுப்புவாதமாகவோ அல்லது சமூகக் கட்டமைப்பு அல்லது அரசின் கொள்கைக்கு எதிராகவோ இருந்தால், அவற்றை ரத்து செய்வது குறித்து பரிசீலிப்போம்” என கூறியிருந்தார். இந்த சூழலில், பிரியங்க் கார்கேவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பா.ஜ.க எம்.எல்.ஏ மகேஷ் தெங்கினகாயி, “ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்ய தயங்க மாட்டோம் என, அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியுள்ளார். கர்நாடக மக்கள், காங்கிரசுக்கு பெரும்பான்மை கொடுத்துள்ளனர். தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியினர் பல வாக்குறுதிகளை அறிவித்தனர். அவற்றை செயல்படுத்துவதை விட்டுவிட்டு, தேவையின்றி பேச வேண்டாம். தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ அமைப்பு, அதன் துணை அமைப்புகள்மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் பஜ்ரங் தள், ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளை ஒப்பிட்டு பார்ப்பது சற்றும் சரியல்ல. இப்படி பேசி தேவையின்றி பிரச்சனைகளை இழுக்காதீர்கள். தேர்தலில் நீங்கள்: கொடுத்த வாக்குறுதியின் படி, 10 கிலோ அல்லது 15 கிலோ அரிசி கொடுப்பீர்களா, இலவச மின்சாரம் கொடுப்பீர்களா என்பதை மட்டும் கூறுங்கள். தேவையற்ற விஷயங்களை பேசி மக்களை திசை திருப்பாதீர்கள்” என கூறினார்.