மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு எதிராக பகிரங்கமாக கருத்து தெரிவித்ததற்காக முன்னாள் எம்.எல்.ஏ ஆஷிஷ் தேஷ்முக்கை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்கியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவான், மாநில காங்கிரஸ் ஒழுக்காற்றுக் குழுவின் தலைவருமான, ஆஷிஷ் தேஷ்முக்கிற்கு, மே 22ம் தேதி கடிதம் மூலம் அவர் நீக்கப்பட்டதை தெரிவித்தார். ”கட்சிக்கு எதிராக நீங்கள் பகிரங்கமாகப் பேசியது தொடர்பாக நீங்கள் அளீத்த பதில் திருப்திகரமாக இல்லை. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீங்கள் நீக்கப்பட்டிருக்கிறீர்கள்” என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. தேஷ்முக், நாக்பூரில் உள்ள கடோல் தொகுதியின் முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ ஆவார், அவர் பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார். அவர் 2019 சட்டமன்றத் தேர்தலில் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் பா.ஜ.க தலைவரும் தற்போதைய துணை முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். இவர் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ரஞ்சித் தேஷ்முக்கின் மகன் ஆவார். முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘மோடி’ என்ற குடும்பப்பெயர் கொண்ட இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு (ஓ.பி.சி) எதிரான கருத்துகளை தெரிவித்திருந்தார். இதனால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆஷிஷ் தேஷ்முக், ஓ.பி.சி சமூகத்தினரிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் கைகோர்த்து இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்தே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.