ஞானவாபி வழக்குகள் ஒன்றாக விசாரிக்கப்படும்

பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ஞானவாபி வழக்குத் தொடர்பான 8 வழக்குகளை ஒருங்கிணைக்கக் கோரிய விண்ணப்பத்தை வாரணாசி நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒன்றாக விசாரிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட நீதிபதி அஜய கிருஷ்ணா விஸ்வேஷா கூறினார். “நீதியின் நலனுக்காக மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து வழக்குகளும் ஒன்றாக விசாரிக்கப்பட வேண்டும் மற்றும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். மேலும், இந்த வழக்குகள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தும் அத்தகைய வழக்குகள் அல்லது நடவடிக்கைகளின் ஆதாரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். பொதுமக்களின் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தவும், சட்ட ரீதியான சிக்கல்களைத் தவிர்க்கவும் வழக்குகளை ஒருங்கிணைக்க நீதிமன்றத்தை வலியுறுத்தி இதுபோன்ற வழக்குகளை ஒருங்கிணைப்பதற்கான விண்ணப்பம் பரிசீலிகப்பட்டது.” என்று நீதிபதி தெரிவித்தார். இதனையடுத்து, ஞானவாபி சர்ச்சை தொடர்பான அனைத்து வழக்குகளும் மாவட்ட நீதிபதி நீதிமன்றத்தால் ஒன்றாக விசாரிக்கப்பட உள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட இந்த வழக்குகளில் ஆறு வழக்குகள் சிவில் நீதிபதி (மூத்த பிரிவு) நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன என்பதும், ஒன்று சிவில் நீதிபதியின் (மூத்த பிரிவு) விரைவு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.