டெல்லியை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மற்றும் பஞ்சாப் காவல்துறையினர் மற்றும் அமைச்சர்களால் துன்புறுத்தப்படுவதாக டெல்லி அரசின் தலைமைச் செயலாளர் உட்பட 8 மூத்த அதிகாரிகள் துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளனர். மே 20 சனிக்கிழமையன்று, டெல்லி துணைநிலை ஆளுநர் அலுவலகம் இதனை வெளிப்படுத்தியது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசும், அதன் அமைச்சர்களும் பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசும் தங்கள் மீது அப்பட்டமான துன்புறுத்தல்களை நிகழ்த்தியதாக அவர்கள் புகார் அளித்துள்ளனர். அகில இந்திய சேவைகள் பிரிவை சேர்ந்த எட்டு அதிகாரிகளிடமிருந்து இந்த புகார்கள் வந்துள்ளது. டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசுகள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பழிவாங்கும் விதமாக, தங்களையும் தங்களது குடும்ப உறுப்பினர்களையும் அவர்கள் வேட்டையாடத் தொடங்கியதாக குற்றம் சாட்டியுள்ளனர். புகார்களை அனுப்பிய அதிகாரிகளில் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 1 ஐ.பி.எஸ் மற்றும் 1 ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஆகியோர் அடங்குவர். இவர்களிடம் இருந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு புகார்கள் பெறப்பட்டன. கடந்த மே 11 முதல் இதுவரை ஆறு புகார்கள் பெறப்பட்டன. ஆம் ஆத்மி தலைவர்களால் தான் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டும் அதிகாரிகளில், டெல்லி அரசின் தலைமைச் செயலாளர் நரேஷ் குமாரும் ஒருவர். டெல்லி அரசின் அமைச்சர் சௌரப் பரத்வாஜ், மே 16 அன்று தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக அவர் குற்றஞ்சாட்டி காவல்துறையில் புகார் அளித்தார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நரேஷ்குமாரை தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க டெல்லி அரசு முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பதிலாக தற்போது டெல்லி அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராக உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரவீன் குமார் குப்தாவை நியமிக்குமாறு மத்திய அரசை அது கேட்டுக் கொண்டுள்ளது.