பா.ஜ.க மாநில துணைத் தலைவருக்கு கண்டனம்

தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்பின் பொறுப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பா.ஜ.க மாநில துணைத் தலைவரும் வழக்கறிஞருமான பால் கனகராஜுக்கு இந்து முன்னணி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே, பா.ஜ.க துணைத் தலைவரின் செயல் தவறானது’ என்ற தலைப்பில் இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “2047ல் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம் என்றும் அதற்கு தடையாக இருக்கும் இந்து தலைவர்களை அழிக்கும்e செய்யும் சதித் திட்டத்துடன் செயல்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில பொறுப்பாளர்களாக இருந்த இரண்டு வழக்கறிஞர்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மதுரையில் கைது செய்து இருக்கிறார்கள். ஆனால் முகமது யூசுப் மற்றும் முகமது அப்பாஸ் என்ற அந்த இரண்டு வக்கீல்களும் இஸ்லாமிய குற்றவாளிகளுக்கு அவர்களது வழக்கில் ஆஜரானார்கள் என்பதற்காக கைது செய்யப்பட்டது போல் ஒரு தவறான பொய் பிரச்சாரத்தை முன்வைத்து சென்னையில் ஒரு சில வழக்கறிஞர்களின் ஏற்பாட்டில் நீதிமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளார்கள். அந்த முகமது யூசுப் மற்றும் முகமது அப்பாஸ் ஆகிய இருவரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில பொறுப்பாளர்களாக இருந்து செயல்பட்டவர்கள். அந்த அமைப்பின் சதி திட்டங்களில் அவர்களுக்கும் பங்கு இருப்பதாக கூறி தான் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவர்களை கைது செய்து இருக்கிறார்கள். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவராக இருக்கும் வழக்கறிஞர் பால் கனகராஜ், அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் ஏதோ அந்த இரண்டு வக்கீல்களும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக கைது செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜரானதால் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் ஒரு பொய்யான தகவலுடன் பேட்டியளித்து இருக்கிறார். 2047ம் ஆண்டு இந்தியாவை இஸ்லாமிய நாடாக அறிவிப்போம் என்ற பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா  (பி.எப்.ஐ) அமைப்பின் சதித் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த இரண்டு வக்கீல்களும் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டில் தான் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் பால் கனகராஜின் பேட்டி பாரத தேசத்தின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தும் விதமாக இருக்கிறது. இந்திய தேசியத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் விதமாக சதி செயல்களில் ஈடுபட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில பொறுப்பாளர்களுக்கு ஆதரவாக பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுத்த பா.ஜ.கவின் தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவர் பால்கனகராஜின் செயலினை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது” என தெரிவித்துள்ளார்.