தடை செய்யப்பட்ட மத அடிப்படைவாத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு (பி.எப்.ஐ) எதிரான சட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக அசாம் காவல்துறையினர், கார்ம்ரூப் மாவட்டத்தில் உள்ள நகர்பெரா பகுதியைச் சேர்ந்த அப்துல் ரசாக் அலி என்ற பி.எப்.ஐ உறுப்பினர் ஒருவரை கடந்த புதன்கிழமை கைது செய்தனர். அப்துல் ரசாக் அலி நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்ததாகவும், பொலஹர்தாரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அவரைப் பிடித்து கைது செய்ததாகவும் நகர்பெரா காவல் நிலையப் பொறுப்பாளர் மிரேல் அகமது தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதற்காக நேற்று இரவு நாங்கள் ஒரு அதிரடி ஆபரேஷன் நடத்தி அப்துல் ரசாக் அலியைப் பிடித்தோம். அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் தலைமறைவாக இருந்தார். மேலும் சில பி.எப்.ஐ உறுப்பினர்கள் நகர்பெரா பகுதியில் இன்னும் மறைமுகமாக செயல்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது. அவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பி.எப்.ஐக்கு எதிரான எங்கள் நடவடிக்கை தொடரும்” என்று மிரேல் அகமது கூறினார்.