உலகப்புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே, கொடுங்கோலன் ஔரங்கசீப்பால் கோயிலை இடித்துவிட்டு அங்கு கட்டப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தை சிதைக்காமல், கார்பன் டேட்டிங் முறையில் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த மே 12ம் தேதி உத்தரவிட்டது. இந்த சூழலில் புதிய மனு ஒன்று வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், இந்திய தொல்லியல் துறை (ஏ.எஸ்.ஐ) மூலம் முழு மசூதி வளாகத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதனையடுத்து, மே 22ம் தேதி வாரணாசி மாவட்ட நீதிபதி முன் ஆஜராகுமாறு ஏ.எஸ்.ஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் அரசு சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ராஜேஷ் மிஸ்ரா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் இதனை உறுதிப்படுத்தினார். கடந்த ஆண்டு மே மாதம், ஹிந்து மற்றும் முஸ்லிம் பிரிவினரால் சர்ச்சைக்குள்ளான அந்த மசூதி வளாகத்தில் உள்ள ஒரு சிவலிங்கம் போன்றதொரு அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஹிந்துக்கள் அதை ஒரு சிவலிங்கம் என்று கூறினர். அதே சமயம் முஸ்லிம்கள் அதனை ஒரு நீரூற்று என்று வலியுறுத்தினர். மேலும், மசூதியின் மூன்று குவிமாடங்களில் ஒன்றின் கீழ் ஒரு குவிமாடம், அதனுடன் இணைந்த ஒரு படிக்கட்டு கண்டுபிடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அது ஒரு காலத்தில் இருந்த கோயிலின் குவிமாடம் என்று ஹிந்து தரப்பு மனுதாரர்கள் கூறுகின்றனர்.