அசாம் மாநில காவல்துறையில் மிகப்பெரிய அளவில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா முடிவு செய்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, காவலர்கள் தங்களது உடலை முழு தகுதியுடன் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மாவும் காவல்துறை டி.ஜி.பி ஞானேந்திர பிரதாப் சிங்கும் இணைந்து வெளியிட்டுள்ளனர். அதன்படி, வரும் நவம்பர் மாதத்துக்குள் உடல் பருமனாக உள்ள காவலர்கள், தங்களது உடல் எடையைக் குறைத்து முழு தகுதியுடன் இருக்க வேண்டும். அப்படி குறைக்க முடியாதவர்கள் வி.ஆர்.எஸ் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றுச் செல்லலாம். ஏற்கனவே அதிகமான குடிப்பழக்கம் உள்ள காவலர்கள் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும், அதனால் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், குடிப்பழக்கத்தை விட முடியாதவர்கள் எல்லாம் வி.ஆர்.எஸ் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றுச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது நினைவு கூரத்தக்கது. இதைத் தொடர்ந்து அசாம் காவல்துறையில் அனைத்து காவலர்களுக்கும் உடற்தகுதி பரிசோதனை, உடல் எடை குறியீட்டு எண் சோதனை ஆகியவற்றை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் தகுதி இல்லாதவர்கள்தங்களது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும். அடுத்த 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்த சோதனை அவர்களுக்கு நடத்தப்படும். பி.எம்.ஐ 30 பிளஸ் பிரிவில் உள்ளவர்களுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்படும். அதன் பின்னரும் அவர்கள் உடல் எடையைக் குறைக்க முடியாவிட்டால் வி.ஆர்.எஸ் திட்டம் அமல்படுத்தப்படும். விதிவிலக்கான மருத்துவப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு வழங்கப்படும், அவர்களுக்கு ஏற்ற பணி ஒதுக்கப்படும் என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது.