திருணமூல் தலைவரின் வீட்டில் வெடிகுண்டு தொழிற்சாலை

மேற்கு வங்கத்தின் பர்பா மேதினிபூர் மாவட்டத்தின் எக்ராவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த செவ்வாய்கிழமை பிற்பகுதியில் நடந்த ஒரு பெரிய குண்டுவெடிப்பு பல உயிர்களைக் கொன்றது. மேற்கு வங்க ஆளும் கட்சியான திருணமூல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் நிர்வாகி பானு பாக் என்பவரின் வீட்டில் சட்டவிரோத வெடிகுண்டு தயாரிக்கும் தொழில் நடைபெற்று வந்தது. அங்கு பணிபுரிந்த சில உள்ளூர் கிராமவாசிகள் வெடிகுண்டுகளை தயாரிக்கும் போது இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது என்றும் தெரிய வந்துள்ளது. இதில் கொல்லப்பட்ட 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சில உடல்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு அப்பகுதியெங்கும் சிதறிக் கிடப்பதால் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும். பயங்கர குண்டுவெடிப்பின் தாக்கம் கிராமம் முழுவதும் உணரப்பட்டது. அப்பகுதியில் உள்ள சில வீடுகளும் இதனால் பலத்த சேதம் அடைந்தன என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். குண்டுவெடிப்பு நடந்ததும் தகவல் அறிந்து கிராமத்திற்கு வந்த எக்ரா காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள், உள்ளூர்வாசிகளின் கடும் கோபத்தை எதிர்கொண்டனர். திருணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் பானு பாக் வீட்டில் சட்டவிரோதமாக வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலை பல காலமாக இயங்கி வருவதாக காவல் துறையினரிடம் தொடர்ந்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக கிழக்கு மிட்னாபூர் காவல்துறை தலைவர் கே அமர்நாத் தெரிவித்தார். இந்த குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.