கேன்ஸ் திரைப்பட விழாவில் அமைக்கப்பட்டுள்ள பாரத அரங்கை பார்வையிட வருமாறு உலக நாடுகளைச் சேர்ந்த அனைத்து திரைத்துறையினருக்கும் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் அழைப்பு விடுத்துள்ளார். கேன்ஸ் திரைப்பட விழா நேற்றுத் தொடங்கி வரும் 27ம் தேதி வரை பிரான்சில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விழாவை முன்னிட்டு அமைச்சர் முருகன் வெளியிட்டுள்ள காணொலி செய்தியில், ‘வசுதைவ குடும்பகம்’ என்ற உத்வேகத்துடன், பாரதம் கேன்ஸ் திரைப்பட திருவிழாவின் 76வது அத்தியாயத்தில் பங்கேற்றிருக்கிறது. இது ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற சக்திவாய்ந்த படைப்பு பொருளாதாரத்தின் அடிப்படையில், பாரதத்தின் தொன்மைவாய்ந்த கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது. பாரதத் திரைப்படங்களின் தொன்மை மேம்பட்டு வருவதற்கு, இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘ஆர்ஆர்ஆர்’ மற்றும் ‘த எலிஃபென்ட் விஸ்பெரர்ஸ்’ ஆகிய திரைப்படங்களே சாட்சி. பாரதத் திரைப்படங்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் உலகளாவிய ஊடகங்களின் மேம்பாட்டுக்கும், கேளிக்கைத் துறைக்கும் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் பாரதத்திற்கு ‘கன்ட்ரி ஆஃப் ஹானர்’ அங்கீகாரம் வழங்கப்பட்டது. பாரதத்தில் வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான படப்பிடிப்பை நடத்தவும், திரைப்படம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளவும், ஊக்கத்தொகைத் திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 16 நாடுகளுடன் இணைந்து திரைப்படத் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்களை பாரதம் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக மேலும் 20 நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கேன்ஸ் திரைப்பட விழாவில் பாரதத் திரைப்படங்கள் திரையிடப்படுவது, அதன் திரைப்படங்களின் வளர்ச்சிக்கான செல்வாக்கை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது” என தெரிவித்தார். கேன்ஸ் திரைப்பட விழாவில் அமைக்கப்பட்டுள்ள பாரத அரங்கை பார்வையிட வருமாறு உலக நாடுகளைச் சேர்ந்த அனைத்து திரைத்துறையினருக்கும் அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் முருகன், பாரதத்தின் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுடன் ஒருங்கிணைந்து பாரதத்தின் கலை மற்றும் கலாச்சாரத்தின் தொன்மைகளை அறிந்துகொள்ள சிறந்த வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.