அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம்

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிக்கான தொடக்க விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் நமச்சிவாயம் பயிற்சிகளை தொடங்கி வைத்து பேசுகையில், “புதுச்சேரி மாணவர்களுக்கு இதுவரை தமிழ்நாடு பாடநூல் கழகத்தை பின்பற்றி கல்வி வழங்கப்பட்டு வந்தது. புதுவை அரசு எடுத்த கொள்கை முடிவு காரணமாக புதுவையில் உள்ள அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மத்திய கல்வித்துறை அமைச்சரை சந்தித்து புதுவை மாநிலத்தில் அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். நீட், ஜெ.இ.இ போன்ற தேர்வுகளில் மாணவர்கள் பங்கெடுக்க வசதியாக சி.பி.எஸ்.இ போன்ற பாடத்திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த பாடத்திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்றால் அதற்காக சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளின்படி பள்ளிகள் இருந்தால் மட்டுமே மத்திய அரசு அனுமதி வழங்கும். எனினும், புதுவையில் உள்ள ஏராளமான அரசு பள்ளிகளில் மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்க முடியாது. எனவே அதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய கல்வியமைச்சர் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து எந்த விதமான ஆய்வும் மேற்கொள்ளாமல் புதுவை அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை கொண்டு வர அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதல் கட்டமாக 78 பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளிகளுக்கு விரைவில் வழங்கப்படும். மேலைநாடுகளில் கல்வி முறைகளில் ஏராளமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ப கல்வி முறையை கொண்டு வர வேண்டும். அப்போது தான் எதிர்கால சந்ததியினர் வாழ்வில் முன்னேற்றம் அடைய முடியும்” என கூறினார்.