கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வெற்றி கொண்டாட்டங்கள் அசிங்கமாக மாறியது. பெங்களூருக்கு அருகேயுள்ள ஹோஸ்டாக்கின் டி ஹோசஹள்ளி கிராமத்தில், 21 வயதான காங்கிரஸ் ஆதரவாளரான ஆதித்யா மற்றும் அவரது தந்தை கணேஷ் ஆகியோர் காங்கிரஸ் ஆதரவாளர்களுடன் சேர்ந்து பா.ஜ.கவின் தோல்வியைக் கொண்டாடினர். அப்போது ஆதித்யாவின் சித்தப்பாவும் பா.ஜ.க ஆதரவாளருமான கிருஷ்ணப்பா என்பவரது வீட்டிற்கு வெளியே வேண்டுமென்றே பட்டாசுகளை வெடித்தனர். பட்டாசு வெடிப்பதை கிருஷ்ணப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்த்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆதித்யா, அவரை கோடரியால் கொடூரமாகத் தாக்கினார். இந்த தாக்குதலில் கிருஷ்ணப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி கங்கம்மா மற்றும் மகன் பாபு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இறந்த கிருஷ்ணப்பாவுக்கும் அவரது சகோதரர் கணேஷுக்கும் இடையே சில தகராறுகள் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மற்ற குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்றும் பா.ஜ.க ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர். கிருஷ்ணப்பாவின் உடலை நந்தகுடி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஆதித்யாவை காவலர்கள் கைது செய்துள்ளதாகவும், சம்பவத்தில் தொடர்புடைய அவரது தந்தை கணேஷ் உள்ளிட்டோர் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும் அப்பகுதியில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுனா பால்தாண்டி தெரிவித்துள்ளார்.