கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 17ம் தேதி சில கட்சியினர், அமைப்பினர் மற்றும் சமூக விரோதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் காவல்துறை வாகனங்கள், பள்ளி வாகனங்கள், பள்ளியின் சில பகுதிகளை அந்த வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் தீ வைத்து எரித்ததுடன் பள்ளி பொருட்களை சேதப்படுத்தி கொள்ளையடித்தனர். பள்ளி மாணவி மரணம் மற்றும் வன்முறை கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், 9 மாத விசாரணைக்கு பிறகு இவ்வழக்கில் சி.பி சி.ஐ.டி காவல்துறையினர் 1,152 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தற்கொலை தான். பாலியல் தொந்தரவு மற்றும் கொலை என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. பள்ளி தாளாளர், செயலாளர், ஆசிரியர்களின் துன்புறுத்தல் எதுவும் இல்லை என சாட்சிகள் கூறியுள்ளன. குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் மாணவி இறப்புக்கு காரணம் இல்லை. க மாணவர்கள், சாட்சிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீமதிக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என தெரியவந்துள்ளது என சி.பி சி.ஐ.டி குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.