விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று முன்தினம், கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் வாங்கி குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த 16 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், கள்ளச்சாராயம் குடித்த சுரேஷ், சங்கர், தரணிவேல் என்ற 3 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர், கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்த நிலையில் எக்கியார் குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெருகிவிட்ட கள்ளச்சாரய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
தமிழகத்தில் தற்போதைய தி.மு.க ஆட்சியில் பெருகிவரும் கள்ளச்சாராயம் தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “மரக்காணம் பகுதியில் கள்ளச் சாராயம் உட்கொண்டதால், சுரேஷ், சங்கர், தரணிவேல் எனும் மூன்று பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், கவலைக்கிடமான நிலையில் 16 பேர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தெரிகிறது. அவர்கள் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். டாஸ்மாக் மூலம் கட்டுப்பாடற்ற சாராய விற்பனை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, தற்போது கள்ளச் சாராய விற்பனையும் தலைதூக்கியிருப்பது தி.மு.க அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது. உடனடியாக தமிழக அரசு தூக்கத்திலிருந்து விழித்து, கள்ளச் சாராய விற்பனையை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க சார்பாக வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கள்ளச்சாராய கலாசாரம் தலைதூக்கியுள்ளதாக குற்றம் சாட்டினார். “கடந்த 10 ஆண்டு கழக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது, தற்போது மீண்டும் இந்த விடியா ஆட்சியின் நிர்வாக திறமையின்மையால் கள்ளச்சாராய கலாச்சாரம் தமிழகத்தில் தலைதூக்கியுள்ளது. இதே மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை தீவிரமாக இருப்பதாக கடந்த ஜனவரி மாதமே செய்திகள் வந்தன. அவற்றை அறிந்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தற்போது நிகழ்துள்ள இந்த மரணங்களுக்கு விடியாஅரசு பொறுப்பேற்க வேண்டும், இனியாவது கள்ளசாராயத்தை அறவே ஒழிக்க நடவடிக்கைகளை எடுக்க இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.