தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை எதிர்த்து அந்த படத்தின் தயாரிப்புக்குழு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ். நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மேற்கு வங்க அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார். அப்போது நீதிபதிகள் “தி கேரளா ஸ்டோரி’’ திரைப்படம் நாடு முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இதனால் பிரச்சினை ஏதும் எழவில்லை. மக்களுக்கு ஒரு திரைப்படம் பிடிக்கவில்லை என்றால் அதனை அவர்கள் பார்க்க மாட்டார்கள். நிராகரித்து விடுவார்கள். அப்படியிருக்கையில், ஏன் எந்தவித காரணமுமின்றி இந்த திரைப்படம் நிறுத்தப்பட்டுள்ளது” என்று அபிஷேக் சிங்வியிடம் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த அபிஷேக் சிங்வி, மாநில உளவுத் துறை தகவலின்படி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்பதாலும், சமூக அமைதி குலைக்கப்படலாம் என்பதாலும் மேற்கு வங்க அரசு இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் ஆஜரான அமித் ஆனந்த் திவாரியிடம், தி கேரளா ஸ்டோரி திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போதிய பாதுகாப்பை வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு தமிழக அரசை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். படக்குழு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, “திரைப்படத்துக்கு தடையில்லை. நடைமுறைசிக்கலின் காரணமாகவே திரையிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிரட்டல் வரும் திரையரங்குகளுக்கு தகுந்த பாதுகாப்பை அளிக்க தமிழக அரசு, காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். மேற்கு வங்க அரசு, படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், “திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பாக தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் வரும் புதன்கிழமைக்குள் தங்கள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு வரும் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என உத்தரவிட்டனர்.