காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுக்கு மறுப்பு

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், முன்பு தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி கூறிய குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை தேவையற்ற வதந்திகள் என்று நிராகரித்த தேர்தல் ஆணையக்குழு, இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பும் ஆதாரங்களை பொதுவில் அம்பலப்படுத்த காங்கிரஸ் கட்சியை கேட்டுக் கொண்டது. மே 15ம் தேதி மாலை 5.00 மணிக்குள் இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சித் தெரிவிக்கவும் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. முன்னதாக, மே 8ம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், கர்நாடகா தேர்தலில், தென்னாப்பிரிக்காவில் முன்பு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேவையான மறுமதிப்பீடு மற்றும் மறு சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்படாமல் மீண்டும் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து காங்கிரஸ் கவலை தெரிவித்து அதுகுறித்த விளக்கம் கேட்டிருந்தது. காங்கிரஸின் ரந்தீப் சிங் சுர்ஜேவாலாவுக்கு தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில், இந்தத் தேர்தலுக்கு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தியதாகக் கூறியது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பப்படவில்லை, அந்த நாடு அந்த இயந்திரங்களைப் பயன்படுத்தவில்லை என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. அதற்கான பதிவேட்டு ஆதாரங்களையும் மேற்கோள் காட்டியுள்ளது.