பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகளை நேரில் வரவழைத்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துரையாடினார். அவ்வகையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இருந்து மாணவி ஷப்ரீன் இமானா தனது பெற்றோருடன் சென்னை வந்திருந்தார். குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் தங்குவதற்காக ஆளுநர் மாளிகையில் கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையில் மாணவி ஷப்ரீன் இமானா தங்க வைக்க ஆளுநர் கூறினார். விதிமுறைப்படி தனி நபர்கள் இங்கு தங்குவதற்கு அனுமதி இல்லை என ஆளுநர் மாளிகை அதிகாரிகள் ஆளுநரிடம் தெரிவித்தனர். அப்போது, ‘தமிழ் வழியில் கல்வி பயின்று சாதனை படைத்த மாணவிக்காக விதிமுறைகளை தளர்த்துவதில் எந்த விதமான தவறும் இல்லை’ என ஆளுநர் கூறியதை அடுத்து மாணவி ஷப்ரீன் இமானாவிற்காக ஆளுநர் மாளிகையின் விருந்தினர் மாளிகை திறக்கப்பட்டது. தமிழுக்கு ஆளுநர் ரவி அளித்த மரியாதையை அறிந்த பலரும் பாராட்டி வருகின்றனர்.