வெளியானது கூகுள் பார்ட்

இணைய உலகையே ஒரு புதிய பரிமாணத்துக்கு கொண்டுச் சென்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், ‘உரையாடல் உருவாக்கல் ஏ.ஐ சாட்பாட்’ (conversational generative AI chatbot) பிரிவில் இதுவரை மைக்ரோசாப்ட் முதலீட்டில் இயங்கி வந்த சாட் ஜிபிடி மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்நிலையில், இதற்கு போட்டியாக கூகுள் அதன் ‘கூகுள் பார்ட்’ (Google BARD) ஏ.ஐ தொழில் நுட்பத்தை தற்போது பாரதம் உட்பட 180 நாடுகளில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் பல நாடுகளுக்கு விரைவில் இதனை அறிமுகம் செய்ய இருப்பதாக கூகுள் கூறியுள்ளது. உண்மையில், கூகுள் இதனை பல வருடங்களாக மிகவும் ரகசியமாக உருவாக்கி வந்தது. ஆனால், சாட் ஜிபிடி அறிமுகம் ஆன பிறகு அதன் பணிகளை வேகப்படுத்தியது. கூகுள் பார்ட் சில நாட்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டாலும், அமெரிக்காவில் மட்டுமே அது, இதுவரை சோதனை முறையில் பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆங்கிலத்தைத் தவிர ஜப்பானீஸ் மற்றும் கொரியன் மொழியிலும் மக்கள் இதை பயன்படுத்த முடியும். விரைவில் 40க்கும் மேற்பட்ட மொழிகளில் கூகுள் பார்ட் பயன்படுத்துவதற்காக மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. கூகுள் பார்ட் தளம் பி.ஏ.எல்.எம் 2 (PaLM 2) என்ற கட்டமைப்பில் இயங்கி வருகிறது, இது கூகுள் சொந்தமாக உருவாக்கியுள்ள புதிய பெரிய மொழி மாதிரியாகும் (large language model). கூகுள் உருவாக்கிய இத்தளம், மேம்பாட்டுக்காக தற்போது அனைத்து டெக் டெவலப்பர்களுக்கு கிடைக்கும். இதனை Google’s PaLM API, Firebase கூட்டணியில் அவர்கள் பயன்படுத்த முடியும். விரைவில் புகைப்படங்களைப் பயன்படுத்தி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலும் மேம்படுத்தப்பட உள்ளது. இது மக்கள் தகவல் தேடுவதை மேலும் எளிதாகும்.

இதை பயன்படுத்துவது எப்படி: முதலில் கூகுள் பார்டின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bard.google.com க்குச் சென்று அதன் துவக்க பக்கத்தின் கீழ் வலது மூலையில் உள்ள ‘TRY ME’ என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். முதல் முறையாக இதனை பயன்படுத்தும் போது பல்வேறு விதிமுறைகளை மற்றும் கட்டுப்பாடுகளுக்கு அது ஒப்புதல் கேட்கும். அதனை ஒப்புக்கொண்டு தனியுரிமைக் கொள்கையை ஏற்க ஒப்புதல் அளிக்க வேண்டும். பின்னர், காத்திருப்புப் பட்டியலுக்குச் செல்லாமல் நேரடியாக கூகுள் பார்டை இலவசமாகப் பயன்படுத்தலாம் இதற்கு முன்பே அதன் தளத்தில் பதிவு செய்திருந்தால் உங்கள் பதிவு காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு தயாராக இருக்கும். உள்நுழைந்ததும் நாம் நமது கேள்வியை கேட்க துவங்கலாம்.  பார்ட் இன்னும் பீட்டா நிலையில் உள்ளது. இதனால் மற்ற செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களை போலவே, இதுவும் தவறுகள் செய்யும் வாய்ப்பு உள்ளது. இதை அனைத்து தரப்பினரும் பயன்படுத்த பாதுகாப்பானதாக இருக்கும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரையில் பயன்படுத்த முடியும் என்றாலும் மற்ற நவீன தொழில்நுட்பங்களை போலவே இதிலும் ஆபத்துகளும் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.