பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 12) குஜராத் செல்கிறார். காந்தி நகரில் ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் 29வது மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவுள்ளார். மாறி வரும் கல்வியின் இதயமாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர் என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும். காந்தி நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில், நகர்ப்புற வளர்ச்சித்துறை, நீர் விநியோகத்துறை, சாலை மற்றும் போக்குவரத்துத்துறை, சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் துறையின் திட்டங்கள் அடங்கிய ரூ. 2,450 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்றப் பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார். சுமார் 1,950 கோடி ரூபாய் செலவில், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, கட்டி முடிக்கப்பட்டுள்ள சுமார் 19,000 வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கவுள்ளார். பிறகு பிரதமர், காந்தி நகரில் உள்ள குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம் (ஜி.ஐ.எப்.டி) சென்று அங்குள்ளவர்களுடன் உரையாடவுள்ளார். நிலத்தடி பயன்பாட்டு சுரங்கப்பாதை மற்றும் கழிவுகளை சேகரிக்கும் தானியங்கி ஆலை உள்ளிட்ட நகரின் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளை பார்வையிடவுள்ளார்.