மாற்றியமைக்கப்பட்ட தமிழக அமைச்சரவையில், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதியமைச்சகப் பொறுப்பு பறிக்கப்பட்டு உள்ளது. இதுவரை நிதி அமைச்சராக இருந்த அவர், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழக அரசின் நிதி மேலாண்மையை திறம்பட நிர்வகிக்க தவறி விட்டார் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லையெனில், 30,000 கோடி விவகாரம் உண்மை தான் என்று மக்கள் உறுதியாக நம்புவார்கள். தகுதியில்லாத ஒரு நபரை நிதியமைச்சராக நியமித்ததற்கு முதல்வர் வருத்தம் தெரிவிப்பாரா? அல்லது தகுதியுள்ள ஒரு நபரின் வாக்குமூலத்தை தவறென்று சொல்வாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும். உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நம்பர் 1 துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப இலக்காவை முதல்வர் ஸ்டாலின், எனக்குத் தற்போது வழங்கியதற்கு நான் நன்றியுள்ளவனாவேன். தொழில்நுட்பமே எதிர்காலத்தை வடிவமைக்கிறது என்பதை நாம் அறிவோம். இத்துறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தை விரைவுப்படுத்துவதற்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகத்தை மீண்டும் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்” என தெரிவித்தார்.