37 நாடுகளில் வெளியாகும் தி கேரளா ஸ்டோரி

பல சர்ச்சைகளுக்கு மத்தியில், சுதிப்தோ சென் இயக்கிய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மக்களின் பெரும் வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வெளியான ஆறு நாட்களுக்குப் பிறகும் திரையரங்குகளில் நல்ல கூட்டம் வருவது படத்தின் வெற்றியை நிரூபிக்கிறது. கடந்த ஆண்டு வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைப் போலவே ‘தி கேரளா ஸ்டோரி’யும் டிரெண்டிங்கில் உள்ளது. உண்மையில், ‘பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு விட்டதாக நினைக்குமாம்’ என்ற பழமொழியை போல, இப்படம் குறித்த மோசமான விமர்சகர்களின் விமர்சனங்கள், மதவாத அமைப்புகளின் போராட்டங்கள், வன்முறைகள், சில மாநில அரசுகளின் நேரடி மற்றும் மறைமுகத் தடைகள், அழுத்தங்கள் போன்றவை தான் இந்த படத்தை பார்க்க பொது மக்களுக்கு மேலும் ஊக்கம் அளித்தது என்றால் அது மிகையல்ல. ஐரோப்பிய நாடுகளும் இந்த பட வெளியீட்டை எதிர் நோக்கி காத்திருக்கின்றன. உள்நாட்டில் இப்படம் ரூ. 65 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. இதனிடையே, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த அதன் நடிகை அதா ஷர்மா, “எங்கள் படத்தைப் பார்க்கப் போகும் கோடிக்கணக்கானோருக்கும் நன்றி, அதை டிரெண்ட் ஆக்கியதற்கு நன்றி, என் நடிப்பை நேசித்ததற்கு நன்றி. 12ம் தேதியில் இருந்து தி கேரளா ஸ்டோரி திரைப்படம், சர்வதேச அளவில் 37 நாடுகளையும் தாண்டி வெளியாகிறது” என தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.