அமைச்சர் சேகர்பாபுவின் மகள் குமுறல்

தமிழக ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகள் ஜெயகல்யாணி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “என் கணவர் சதீஷ் குமார் மீது இஷ்டத்திற்கு வழக்குப் போடுகிறார்கள், என் அப்பாவால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. நான் முதலமைச்சரைச் சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். ஓட்டேரி கொசப்பேட்டை எட்வர்ட் பார்க்கைச் சேர்ந்தவர் சதீஷ் குமார். அமைச்சர் சேகர்பாபுவின் மருமகனான இவர் மீது கொலை மிரட்டல், ஆபாசமாகப் பேசுதல், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பூந்தமல்லி அருகே சதீஷை புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். சதீஷ், அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சதீஷ் குமாரின் மனைவியும், அமைச்சர் சேகர்பாபுவின் மகளுமான ஜெயகல்யாணி செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 2016ம் ஆண்டு முதல் எனது கணவர் சதீஷ் குமாரை காதலித்து வந்தேன். எங்களது காதல் விஷயம் தெரிந்த பின்பு, வீட்டை விட்டு வெளியே சென்றேன். அப்போது எனது கணவர் மீது சிறு சிறு வழக்குகள் மட்டுமே இருந்தது. அதன் பிறகு எனது தந்தை அமைச்சர் சேகர்பாபு தூண்டுதலின் பேரில், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் அதிகமான பொய் வழக்குகள் எனது கணவர் மீது போடப்பட்டது. நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட பிறகு, சேகர்பாபுவின் தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் எங்களுக்கு அடுத்தடுத்து தொல்லைகளை கொடுத்து வருகின்றனர்.

இது மட்டுமல்லாமல் 2018ம் ஆண்டு எனது கணவர் மீது ஒரு பெண் கொடுத்த மோசடி வழக்கை, பாலியல் வன்புணர்வு வழக்காக மாற்றிவிட்டனர். தொடர்ச்சியாக ஏதாவது மனுவை நீதிமன்றத்தில் போட்டு தொந்தரவு செய்து வருகின்றனர். எனது தந்தையின் தொல்லையால் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஓடி ஒளிந்தோம். குறிப்பாக ஓட்டேரி காவல் ஆய்வாளர் ஜானி செல்லப்பா, எங்கள் வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்து, வீட்டை அடித்து உடைத்தார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. சமீபத்தில் எனது கணவர் மீது பெண் கொடுத்த வழக்கு தொடர்பாக பிடிவாரன்டு பிறப்பித்தனர். அந்த வழக்கில் நேற்று எனது கணவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். அந்தப் பெண்ணை காவல் துறையினர் வற்புறுத்தி எனது கணவர் மீது பொய்யான வழக்கை கொடுக்க வைத்துள்ளனர். அந்த பெண்ணை என் தந்தையின் ஆட்கள் மிரட்டி என் கணவர் மீது பொய் புகார் கொடுக்க கூறியுள்ளார்கள். அந்த பெண்ணுக்கு அரசு வேலை தருவதாகவும் பேரம் பேசியுள்ளார்கள். இதை எல்லாவற்றையும் காவல் நிலையத்தில் வைத்தே செய்துள்ளார்கள். அதற்கான ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது. எனது தந்தை சேகர்பாபு தூண்டுதலின் பெயரில், காவல் துறை செய்யும் அடாவடித்தனம் தொடர்பான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. எனக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தற்போது உடல்நிலை சரியில்லை. அதனால் பூந்தமல்லியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். எனது கணவரை மருத்துவமனையில் வைத்தே கைது செய்தனர்.

என் கணவர் மீது பொய் வழக்கு போடும் இன்ஸ்பெக்டர்களுக்கு என் அப்பாதான் டி.ஜி.பி, கமிஷனர் எல்லாமே. அவர் சொல்வதைத்தான் இவர்கள் செய்கிறார்கள். நீதிமன்றத்திற்கு வந்தபோது கூட முதல்வர் ஸ்டாலின் தொகுதியை சேர்ந்த கட்சிக்காரர்கள், என் அப்பாவின் ஆட்கள் என்னை மிரட்டியதை சிலர் பார்த்திருப்பீர்கள். தமிழகத்தில் லாக் அப் மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில் என் கணவருக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. இதற்காக நான் முதல்வர் வீட்டுக்கு செல்லவுள்ளேன். அவரை பார்த்து என்னிடம் உள்ள ஆதாரங்களை சமர்ப்பிப்பேன். அதனைப் பார்த்துவிட்டு எங்கள் பக்கம் உண்மை இருந்தால் அதற்குண்டான நடவடிக்கைகளை அவர் எடுக்க வேண்டும். என் அப்பா சேகர்பாபுவை என்ன செய்ய வேண்டும் என முதல்வருக்குத் தெரியும். ஒருவேளை எனது தந்தை மீது நியாயம் இருந்தால் முதலமைச்சர் என்னைக் கைது செய்ய உத்தரவிட்டாலும் அதை நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். என் கணவரை சிறையில் கொடுமைப்படுத்தி என்னை பார்க்க விடாமல் செய்தால், நிச்சயமாக தற்கொலை செய்து கொள்வேன். அதற்கு காரணம் அமைச்சர் சேகர்பாபு மற்றும் காவல்துறையினர் தான் என எழுதி வைப்பேன். அமைச்சரின் மகளான எனக்கே காவல்துறையினர் இவ்வளவு தொந்தரவு செய்கிறார்கள் என்றால், சாமானியப் பெண்களின் நிலை என்ன? என் கணவர் மீது பொய் வழக்கு போடுகிறார்கள் என கமிஷனர், டிஜிபி உள்ளிட்டோருக்கு மனு அளித்துவிட்டேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை” என கூறினார். கைது செய்யப்பட்ட சதீஷ் குமாருக்கு வரும் 11ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி அல்லிக்குளம் மாஜிஸ்ட்ரேட் உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து சதீஷ்குமாரை காவல் துறையினர் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.