மேற்கு வங்கத்தில் வளர்ச்சித் திட்டங்கள்

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்கத்தில் இந்திய நிலத் துறைமுக ஆணையம், எல்லைப் பாதுகாப்புப் படை  ஆகியவற்றின் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். புதிதாக கட்டப்பட்ட எல்லைப் புறக்காவல் நிலையங்கள் மற்றும் பிற கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர்கள் நிஷித் பிரமாணிக், சாந்தனு தாக்கூர், இந்திய நிலத் துறைமுக ஆணையத்தின் தலைவர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் உட்பட பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு அமித்ஷா அவருக்கு மரியாதை செலுத்தினார். இதில் பேசிய அமித்ஷா, “இந்திய நிலத் துறைமுக ஆணையம், நாட்டின் பொருளாதாரத்தை விரைவுபடுத்த உதவுவது மட்டுமல்லாமல், நமது நாட்டின் நட்புச் செய்தியின் தூதுவராகவும் உள்ளது. அனைத்து தெற்காசிய நாடுகளுடனும் 15 ஆயிரம் கி.மீ நீளமுள்ள நமது நாட்டின் தரை எல்லையை உள்ளடக்கிய நமது கலாச்சார மற்றும் வர்த்தக உறவுகளை முன்னெடுத்துச் செல்லும் மிகப்பெரிய நிறுவனமாக இந்திய நிலத் துறைமுக ஆணையம் திகழ்கிறது. 2016க்கும் 2022ம் ஆண்டுக்கு இடையில், நிலத் துறைமுக சரக்கு மற்றும் பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2016ம் ஆண்டில் வர்த்தகத் தொகை ரூ. 18,000 கோடி, அது இப்போது ரூ. 30,000 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த ஆண்டில், 20 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் தரை துறைமுகங்கள் வழியாக செல்வார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், அரசின் எல்லைப் பாதுகாப்புக் கொள்கை மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் உள்ளது. எல்லையோரப் பகுதிகளில் வலுவான உள்கட்டமைப்புப் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டின் பிற கிராமங்களைப் போலவே எல்லையோர கிராமங்களிலும் நலத் திட்டங்களின் பலன்களை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பனிச் சிகரங்கள் முதல் பாலைவனம் வரையிலும், நில எல்லையில் இருந்து வங்காள விரிகுடா வரையிலும், எல்லா இடங்களிலும் நமது நிலத்தையும், எல்லைகளையும் பாதுகாக்க எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்) செயல்பட்டு வருகிறது. பி.எஸ்.எப் இல்லாமல் பாரதத்தின் தரை எல்லைகளின் பாதுகாப்பை கற்பனை செய்து பார்க்க முடியாது” என்று கூறினார்.