பிரம்மாண்ட அரண்மனையை போல கட்டப்பட்டு வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்களாவான ‘ஷீஷ் மஹால்’ திட்டத்தை முதலில் அம்பலப்படுத்தியவர் டைம்ஸ் நவ் செய்தி நிறுவனத்தை சேர்ந்த பெண் நிருபரான பாவனா கிஷோர். அதன் பிறகு சில நாட்களில் ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநில காவல்துறையால் அவர் பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்டார். டெல்லியில் இருந்து லூதியானாவுக்கு கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவத் மான் தொகுத்து வழங்கும் ஆம் ஆத்மி அரசியல் நிகழ்ச்சியை ஒளிபரப்பச் சென்றபோது அவர் கைது செய்யப்பட்டார். அவர் பயணித்த வாகனம் சாலை விபத்தில் சிக்கியது. இதில் வாகன ஓட்டுனர் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்வதற்கு பதிலாக, பாவனா கிஷோர், ஒளிப்பதிவாளர் ஆகியோர் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அவர் மீது, பழிவாங்கும் நோக்கில், கண்முடித்தனமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் பட்டியல் சமூகத்தை இழிவுபடுத்துதல் என்ற பொருத்தமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. இது “வெட்கக்கேடான துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் தந்திரங்களின் ஒரு பகுதியாகும்” என்று அவர் சார்ந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா “டைம்ஸ் நவ் ஊடகத்தை சேர்ந்த பாவனா கிஷோர் அந்த விபத்துக்குப் பிறகு ஒரு ஆண் காவல் அதிகாரியால் காரில் அழைத்துச் செல்லப்பட்டார், பெண் காவலர் இருக்க வேண்டும் என்ற நடைமுறைகள் இதில் மீறப்பட்டது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு ஒரு பெண்ணைக் கைது செய்ய முடியாது என்றாலும், பாவனா கிஷோர் இரவு 8:55 மணிக்கு கைது செய்யப்பட்டார். பின்னர் இரவு முழுவதும், அடுத்த நாள் மதியம் வரை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட பிறகு, அவருக்கும் அவரது குழுவினருக்கும் சட்டப்பூர்வ அணுகலும் தொலைபேசி அணுகலும் மறுக்கப்பட்டது. லூதியானாவில் உள்ள ஒரு காவல் நிலையம் அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது அதிகப்படியானதாகவும் தேவையற்ற அவசரமாகவும் தெரிகிறது. நிருபர் அவரது பணியில் இருப்பதால், காவலில் வைத்து வழக்குப்பதிவு செய்வதில் அதிகாரிகள் நிதானத்தைக் காட்டியிருக்க வேண்டும்” என கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பிறகு அவரும் அவரது குழுவினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டனர். பாவனா கிஷோர், கழிவறையை கதவு திறந்த நிலையில் பயன்படுத்துமாறு காவல்துறையால் கட்டாயப்படுத்தப்பட்டார். நிருபர், ஒளிப்பதிவாளர் மற்றும் ஓட்டுநர் மீதான இந்த நியாயமற்ற கைது மற்றும் வழக்குப்பதிவுக்கு எதிராக பல பத்திரிகை குழுக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் நிருபருக்கு மே 6 அன்று ஜாமீன் வழங்கியது.