தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தலையால்நடந்தான் குளம் கிராமத்தில் பனைமரம் ஏறி பிழைப்பு நடத்தி வந்தார் மாடசாமி. 30 முதல் 40 பனை மரங்களில் ஏறி தினமும் சுமார் 60 லிட்டர் பதநீர் எடுப்பார். மாடசாமி பதநீரை சாலையோர வியாபாரிகளுக்கு விற்றுவிட்டு, மீதமுள்ளதை வீட்டிற்கு கொண்டு சென்று பனைவெல்லம் தயாரித்து வந்தார். ஆனால், கயத்தாறு காவல்துறையினர், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ‘கள்’ விற்பதாக கூறி கடந்த ஏப்ரல் 23ம் தேதி மாடசாமியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். கல்லூரியில் எம்.காம் பயிலும் மாடசாமியின் மகன் மணிகண்டன், தன் தந்தைக்கு ஜாமீன் பெற்று அவரை காவல் நிலையத்தில் இருந்து அன்று மாலை அழைத்து வந்தார். இரவு 8 மணியளவில் காவல் நிலையத்தை விட்டு அவர்கள் வெளியேறியபோது, துணை காவல் ஆய்வாளர் திலீபன் மாடசாமியை மீண்டும் காவல் நிலையத்தில் அழைத்துச்சென்று அவரது மகன் கண் எதிரிலேயே கொடூரமாக தாக்கினார். மற்ற காவலர்கள் அவரது மகன் மணிகண்டனை தடுத்துவிட்டதால் அவரும் செய்வதறியாது தவித்தார். மீண்டும் பதநீர் எடுக்க கயத்தாறுக்கு வந்தால் கை கால் உடைத்துவிடுவதாக திலீபன் மாடசாமியை எச்சரித்தார்.
அங்கிருந்து வெளியே அழைத்துவரப்பட்ட மாடசாமி மயங்கி விழுந்தார். உடனடியாக பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் குடும்பத்தினரால் அனுமதிக்கப்பட்டார். துணை காவல் ஆய்வாளர் தாக்கியதால், மாடசாமியின் காதுகள், தோள்பட்டை மற்றும் முதுகில் ஏற்பட்ட கடுமையான சேதம் மற்றும் வலி காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். காதுகளில் உள்ள காயங்கள் விரைவில் குணமடையவில்லை என்றால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். 10 நாட்களுக்குப் பிறகும் அவரது இடுப்பில் உள்ள வீக்கம் குறையவில்லை. முன்னதாக, ஜனவரி 10, 2022 தேதியிட்ட சுற்றறிக்கையில் காவல்துறை இயக்குநர் அலுவலகம், பதநீர் எடுப்பவர்கள் மற்றும் கருப்பட்டி தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்குமாறு அனைத்து காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும், ஆணையர்களுக்கும் அறிவுறுத்தியது நினைவு கூரத்தக்கது. பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினர், இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி எஸ்.பி எல். பாலாஜி சரவணன் கவனத்திற்கு இதனை கொண்டு சென்றபோது, அந்த அலுவலக ஊழியர்கள் திருநெல்வேலியில் உள்ள டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார் அளிக்குமாறு தெரிவித்தனர். இதனையடுத்து, திருநெல்வேலி டி.ஐ.ஜி பிரவேஷ் குமாரிடம் மாடசாமியின் இரண்டாவது மகன் மகேஸ்வரன் புகார் அளித்துள்ளார். கோவில்பட்டி டி.எஸ்.பி அலுவலகத்தில் இருந்து மேல் விசாரணைக்கு தொடர்பு கொள்வார்கள் என்று டி.ஐ.ஜி அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.