பாரதத்தை இழிவுபடுத்தும் லான்செட்

பிரபல மருத்துவ இதழான தி லான்செட் அதன் மே மாத இதழில், பாரதத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசையும் குறிவைக்கும் சந்தேகத்திற்குரிய கொரோனா தரவு மற்றும் பத்திரிகை சுதந்திர தரவரிசை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு தலையங்கத்தை வெளியிட்டது. “இந்தியாவின் ஏற்றம்: தலைமைத்துவம் ஒருமைப்பாட்டைக் கோருகிறது” என்ற தலையங்கத்தில், அந்த மருத்துவ இதழ், பாரதத்தை இழிவுபடுத்தும் அரசியல் பரப்புரைக் களமாக மாறியது. தனது தலையங்கத்தின் ஆரம்பத்தில், பார்தத்தில் நடைபெறவிருக்கும் ஜி20 உச்சிமாநாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது. உலகளாவிய தெற்கின் குரலை பாரதம் எவ்வாறு நிலைநிறுத்த விரும்புகிறது, அதன் லட்சியத்தை பிரதிபலிக்கும் வகையில் ஜி20 இலக்குகளைப் பயன்படுத்த விரும்புகிறது என பேசிய அந்த இதழ், மோடி அரசின் தேசியவாத நிகழ்ச்சி நிரல், பன்முகத்தன்மைக்கு எதிரான எதிர்ப்பு மற்றும் உள்நாட்டு கவலைகளை அழுத்துவது ஆகியவை அதன் லட்சியங்களை அடைவதில் ஒரு தடையாக மாறிவிட்டதாக கூறியது.

ஒரு உலகளாவிய தலைமையாக பாரதம் மாறுவதற்கான சாத்தியக்கூறுகளை முன்னெடுக்க மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளைப் பற்றிப் பேசிய அந்த தலையங்கம், மருந்துகளை அணுகுவதில் தலைமைத்துவம், கொரோனா தொற்றுநோய்களின் போது அறிவுசார் சொத்துக்களை தள்ளுபடி செய்வதற்கான முன்மொழிவு, ஜெனரிக் மருந்து உற்பத்தி, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன், கோ வின் ஓப்பன்சோர்ஸ் தளம், குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடன் நிவாரணம் பலவற்றை எடுத்துக்கூறியது. எனினும், காலநிலை கொள்கைகள் உட்பட நாட்டில் மோடி அரசு செல்லும் திசை கவலைகளை எழுப்புகிறது. ‘காப் 26’ மாநாட்டில் நிலக்கரி பற்றிய பாரதத்தின் நிலைப்பாடு, உலகின் மூன்றாவது பெரிய கார்பண்டை ஆக்சைடு உமிழ்ப்பாளாக பாரதம் இருப்பதால் சந்தேகத்தை எழுப்புகிறது என்று வாதிட்டது.

தலையங்கத்தின் கடைசி இரண்டு பத்திகள் முழுவதும் அரசியலாக்கப்பட்டது. அதில் கொரோனா இறப்பு அறிக்கை மற்றும் பத்திரிகை சுதந்திரம் தொடர்பாக மோடி அரசை குறிவைக்க சந்தேகத்திற்குரிய தரவுகளை அந்த பத்திரிகை பயன்படுத்தியது. முதலாவதாக, பாரத அரசு வழங்கிய சுகாதாரத் தரவுகள் முற்றிலும் நம்ப முடியாதது என்று கூறியது. பாரதத்தில் கொரோனா மரணங்கள் குறித்த அரசு புள்ளிவிவரங்கள் 5,30,000க்கும் அதிகமாக இருந்தபோதிலும், 2020 மற்றும் 2021க்கு உலக சுகாதார அமைப்பின் அதிகப்படியான இறப்பு மதிப்பீடுகள் சுமார் 4.7 மில்லியனுக்கு அருகில் உள்ளது. ஒரு வகையில், கொரோனா காரணமாக பாரதம் 4.2 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு அதிகப்படியான இறப்பு புள்ளிவிவரங்களை வெளியிடுவதை பாரதம் தாமதப்படுத்த முயற்சித்தது என்றும் கொரோனா தொற்றுநோய்களின் போது அதுகுறித்த விமர்சனங்கள் தணிக்கை செய்யப்பட்டன என்றும் அது கூறியது. எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் (ஆர்.எஸ்.எஃப்) என்ற ஒரு பன்னாட்டு அரச சார்பற்ற நிறுவனம், பாரதத்தின் பத்திரிகை சுதந்திரம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட கீழே உள்ளது என்று பொய்யாக வெளியிட்ட தரவுகளையும் லான்செட் மேற்கோள் காட்டியது. மருத்துவ இதழான தி லான்செட் சந்தேகத்திற்குரிய தரவுகளைப் பயன்படுத்தி பாரதத்தை குறிவைப்பது இது முதல் முறை அல்ல. மே 2021ல், பாரதத்தில் கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து பிரதமர் மோடியை குறிவைத்து பல பொய்ய்யான தரவுகள் அடங்கிய ஒரு கட்டுரையை வெளியிட்டது. ஆர்.எஸ்.எஃப் சந்தேகத்திற்குரிய மற்றும் தவறான அறிக்கைகளைப் பயன்படுத்தி பாரதத்தை உலகின் பல பயங்கரவாத, சர்வாதிகார அரசுகளுக்கு கீழே காட்டி தரவரிசைப்படுத்தியதை சமீபத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டித்திருந்தர் என்பது நினைவு கூரத்தக்கது.