திரைப்படக்குழு உறுப்பினருக்கு அச்சுறுத்தல்

லவ்ஜிஹாத் மூலம் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்ட பின்னர், ஐ.எஸ் பயங்கரவாத முகாம்களுக்கு கடத்தப்படும் மூன்று பெண்களின் வேதனையை விவரிக்கிறது ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம். இதற்கு பொதுமக்களிடம் அமோக ஆதரவு உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி சில மாநில அரசுகள் மறைமுக அழுத்தம் அளித்து அந்த மாநிலங்களில் திரைப்படம் திரையிடப்படுவதை தடுத்துள்ளன. சில முஸ்லிம் அடிப்படைவாதிகள், மதவாத அமைப்புகள், மதவாத கட்சிகள், வாக்குவங்கி அரசியல் செய்யும் கட்சிகள் போன்றவை திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டனர். ராஜஸ்தானில் இந்த திரைப்படத்தின் போஸ்டரை வாட்ஸ்அப் ஸ்டேடசில் வைத்ததற்காக ஒரு இளைஞர் தாக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில், இத்திரைப்பட குழு உறுப்பினர்களில் ஒருவருக்கு ஒரு தெரியாத எண்ணில் இருந்து மிரட்டல் செய்தி வந்ததாக திரைப்பட இயக்குனர் சுதிப்தோ சென் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

அதில், அந்த நபரை வீட்டை விட்டு தனியாக வெளியே வரக்கூடாது என்றும், அவர்கள் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை என்றும் மிரட்டியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து படக்குழுவினருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், காவல்துறை எழுத்துப்பூர்வ புகாரைப் பெறாததால், இதுவரை இந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே தி கேரளா ஸ்டோரி படத் தயாரிப்பு குழு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் திரையரங்குகளில் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிடுவதற்கு ஏதுவாக உரிய பாதுகாப்பை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மேற்கு வங்க அரசு படத்துக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.