ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள தபாலி ரத்தன் கிராமத்தில் சல்மான் கான் என்ற நபர், ஒரு 14 வயது சிறுமியை ஏமாற்றி தனது காதல் வலையில் விழவைத்து கடத்திக்கொண்டு தப்பிச் சென்றான். இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்பகுதி மக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர். இதையடுத்து, குற்றவாளியை பிடிக்கவும், சிறுமியை மீட்கவும் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை துவங்கப்பட்டது. சல்மான் கான் அந்த சிறுமியுடன் அஜ்மீரில் இருக்கலாம் என்ற தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து, குற்றவாளி சல்மானின் படத்தை ஆட்டோ ஓட்டுநர்களிடையே பரப்பிய காவலர்கள், குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது கடத்தப்பட்ட சிறுமி குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்த சூழலில், கடந்த சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில், ஒரு இளைஞர் ஒரு இளம் பெண்ணுடன் பேருந்திலிருந்து இறங்கி, ஹோட்டலில் ஒரு மாதம் வாடகைக்கு அறை கிடைக்குமா என்று ஆட்டோ ஓட்டுநர் ஜாகீர் உசேனிடம் விசாரித்தார். ஹோட்டல் அறைக்கு ஏற்பாடு செய்யும் வரை அந்த இளைஞரை பேருந்து நிலையத்தில் காத்திருக்கச் சொன்ன ஜாகீர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து பேருந்து நிலையத்துக்கு வந்த காவலர்கள், குற்றவாளியைக் கைது செய்து சிறுமியை மீட்டனர்.குற்றவாளியிடம் இருந்து ரூ.1.29 லட்சம் ரொக்கம், 2 சிம்கார்டுகள் மற்றும் சில மதிப்புமிக்க பொருட்களை மீட்டனர். விசாரணையில், அஜ்மீர் தர்காவை பார்வையிட வந்த சல்மான் கான், தான் கடத்திய மைனர் பெண்ணுடன் மும்பை செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் சிறுமியின் தங்க நகைகளை அடகு வைத்து நகைக்கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரத்தை பெற்றதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். சல்மான் கானுக்கு உதவிய மற்றொரு குற்றவாளியான அமன் கானும் கைது செய்யப்பட்டார். அஜ்மீர் எஸ்.பி சுனாராம் ஜாட், சல்மான் கானை கைது செய்ய உதவிய ஆட்டோ ஓட்டுநர் ஜாகீர் உசேனை கௌரவித்தார்.