பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான்

கோவாவில் நடைபெற்ற இரண்டு நாள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ) வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், “பயங்கரவாதத்தை தடுக்க வேண்டும், அதற்கு நிதி  செல்வதை தடுக்க வேண்டும், பயங்கரவாதத்தை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது, பயங்கரவாதத்தை எதை வைத்தும் நியாயப்படுத்தக்கூடாது, எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று பாரதத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக பாகிஸ்தானை சாடினார். இதனையடுத்துப் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ஒரு நாட்டை குற்றம் சொல்வதற்காக பயங்கரவாதம் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்தார். கூட்டம் முடிவடைந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், “பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் நோக்கில் அவரது இந்த பேச்சு அமைந்துள்ளது. பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவராக, நியாயப்படுத்துபவராக, அதன் செய்தித் தொடர்பாளராக பிலாவல் பூட்டோ சர்தாரி இருக்கிறார்” என விமர்சித்தார். மேலும், “அவர்கள் பயங்கரவாதச் செயல்களைச் செய்கிறார்கள். பயங்கரவாத விவகாரத்தில், பாகிஸ்தானின் நம்பகத்தன்மை அதன் அந்நிய செலாவணி கையிருப்பை விட வேகமாக குறைந்து வருகிறது என்று நான் கருதுகிறேன். சட்டப் பிரிவு 370 என்பது வரலாறு. எவ்வளவு சீக்கிரம் மக்கள் அதை உணர்ந்து கொள்கிறாரோ அவ்வளவு நல்லது. ஜி20 மற்றும் காஷ்மீருடன் பாகிஸ்தானுக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். சீன வெளியுறவு அமைச்சர் கின் காங், ஜெய்சங்கருடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, அந்நாடு வெளியிட்ட அறிக்கையில், ‘எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி நிலையானதாக உள்ளது’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், “உண்மையான பிரச்சனை அதுவல்ல. எல்லையில் இரு நாடுகளும் படை விலக்கலை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில், பாரத சீன உறவு சீராக இல்லை. அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகள் உள்ளபோது உறவுகள் ஒருபோதும் சீராக இருக்க முடியாது” என பதிலளித்தார்.