தேசிய தொழில் பழகுநர் மேளா

‘திறன் இந்தியா’ திட்டத்தின் கீழ் பாரத இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் ,மே 8ம் தேதி பிரதமரின் தேசிய தொழிற்பழகுநர் மேளாவை நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட  மாவட்டங்களில் நடத்துகிறது. உள்ளூர் இளைஞர்களுக்கு பொருத்தமான தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்த மேளாவில் பங்கேற்க பல உள்ளூர் நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த பல நிறுவனங்கள் பங்கேற்கும். ஒரே தளத்தின் மூலம், பங்கேற்கும் நிறுவனங்கள், திறன்மிக்க பயிற்சியாளர்களுடன் இணைத்து, அவர்களது தகுதிகளை அந்த இடத்திலேயே தேர்வு செய்து, இளைஞர்களின் வாழ்வாதார வாய்ப்புகளை வலுப்படுத்த முடியும். தனிநபர்கள் https://www.apprenticeshipindia.gov.in/ ஐப் பார்வையிடுவதன் மூலம் மேளாவிற்குப் பதிவு செய்யலாம். 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்களும் திறன் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் அல்லது ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றவர்கள் அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் அல்லது பட்டதாரிகளும் இந்தப் பயிற்சி மேளாவில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தின் மூன்று நகல்களையும், அனைத்து மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் சான்றிதழ்களின் மூன்று நகல்களையும், புகைப்பட அடையாள அட்டை (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை) மற்றும் மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் அந்தந்த இடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் உரிய அனைத்து ஆவணங்களுடன் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது திங்கட்கிழமை நாடு முழுவதும் பயிற்சி மேளாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த மேளாக்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்களுக்கு பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆண்டுக்கு 15 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி மூலம் பயிற்சி அளிக்க அரசு முயற்சித்து வருகிறது. மேலும் இந்தப் பணியை நிறைவேற்ற, நிறுவனங்கள் மற்றும் இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் முயற்சியாக இந்த மேளா நடத்தப்படுகிறது. பங்கேற்கும் நிறுவனங்கள், பல்வேறு வாய்ப்புகள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வை அளிக்கின்றன.