பாரத மாதா கோயில் திறப்பு

செங்கல்பட்டு மாவட்டம் நீலமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ பிரம்ம யோகானந்தா சுவாமிஜி, பாரத மாதா கோயில் ஒன்றை எழுப்பியுள்ளார். நேற்று (மே 5)நடைபெற்ற இக்கோயிலின் கும்பாபிஷேகத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், “உன்னதமான பொற்காலம் நம் கண் முன் இருக்கிறது. இது கனவல்ல, இதுவே உண்மை. அந்த உண்மையை நாம் நம்ப வேண்டும். அகண்ட பாரதம் என்பது உண்மை. அது எப்போதும் நிலைத்திருக்கிறது. நாம் விழித்திருந்தால் இதை உணர முடியும். அகண்ட பாரதம் பிரிக்கப்படவில்லை. வரைபடத்தின் நடுவில் ஒரு கோடு போடப்பட்டுள்ளது அவ்வளவுதான் என்றார். பிரிவினை குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில், லார்டு வேவல் ‘பாரதம் கடவுளால் உருவாக்கப்பட்ட நாடு, இதை பிரிக்க முயல்வது தவறு, உங்களால் முடியாது’ என பேசினார்.

உலகில் அனைத்து பிறப்புகளும் தர்மத்தின் அடிப்படையில் அமைந்தது. இமயம் முதல் ஹிந்து மகா சமுத்திரம் உள்ள பாரதம் இறைவனால் படைக்கப்பட்டது. இந்த பாரதம் சாத்தியத்தாலும், தர்மத்தாலும் அகண்டமாக இருக்கிறது. இதை யாராலும் துண்டாட முடியாது. சனாதன தர்மம் தான் உலகை வழிநடத்தும் என மகரிஷி அரவிந்தர்.கூறியுள்ளார். இந்த தர்மத்தை நிலை நிறுத்த உருவானது தான் பாரதம். சத்தியம், கருணை, தூய்மை, தவம் இவற்றால் நம் நாடு உருவானது. பாரதம் அரசியல், அதிகாரம், அகங்காரத்தின் அடிப்படையில் ஆங்கிலேயர்களால் கோடு போட்டு பிரிக்கப்பட்டது. பாரதத்தின் மீது நாம் நம்பிக்கை வைத்தால் பிரிந்து போனவர்கள் கூட நம்முடன்.வருவார்கள். இங்குள்ள முஸ்லிம்கள், சொல்வது என்னவென்றால், 1947ல் நாங்கள் பாகிஸ்தான் போக விரும்பவில்லை, இங்கே இருக்கவே விரும்பினோம், இங்கேயே இருக்கிறோம் என்று. இந்த நாட்டை நேசித்து இங்கேயே சந்தோஷமாக வாழ்கிறார்கள். அதே நேரம் பாரதத்தை நம்பாமல் பிரிந்து சென்றவர்கள், சந்தோஷமாக இல்லை.

ஹிந்து சமுதாயம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நாடு மற்றும் சமுதாயம் நம்முடையது என்று எண்ண வேண்டும். இந்த விழிப்புணர்வை வேறுபாடுகள் கடந்து நாம் கொண்டு செல்ல வேண்டும். உண்மை என்பது ஒன்றே. நமது வெவ்வேறு மொழிகள், பூஜை முறைகள் ஒரே உண்மையில் வெவ்வேறு வடிவங்கள் மட்டுமே. சுவாமி தயானந்தர், சுவாமி விவேகானந்தர் உள்ளிட்ட மகான்கள், சம்பூர்ண பாரதம் உருவாக வேண்டும் என விரும்பினார்கள். அவர்களின் எண்ணம் 1925ல் டாக்டர் ஹெட்கேவாரால் விதைக்கப்பட்டது. அது இன்று ஆலமரமாக வளர்ந்துள்ளது. அகண்ட பாரதம் உருவாக பாரத மக்கள் விழிப்படைய வேண்டும், தர்மத்தை உணர வேண்டும். நாம் அனைவரும் உடல் மனம் பொருள் ஆகியவற்றை சமர்ப்பணம் செய்ய சங்கல்பம் எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர்.