“உலக அரங்கை அடையும் வகையில், ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறையை ஊக்குவித்து, ஆதரவளிக்க அரசு விரும்புகிறது” என்று மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் அபூர்வ சந்திரா கூறியுள்ளார். பொழுதுபோக்கு வணிகத்திற்கான ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் உறுதியான வருடாந்திர உலகளாவிய மாநாட்டில் ஒன்றான எஃப்.ஐ.சி.சி.ஐ ஃபிரேம்ஸ்சின் 23வது மாநாடு கடந்த 3ம் தேதி துவங்கி 5ம் தேதி வரை மும்பையில் உள்ள போவாயில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அபூர்வ சந்திரா, “தொழில்துறையில் அதிக மனிதவளம் வரும் வகையில் மேலும் மேலும் நிறுவனங்களை அமைக்க, தொழில்துறையுடன் இணைந்து பணியாற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் தங்களுக்கு பிடித்த திரைப்படங்களை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் மீட்டெடுப்பதற்கு நிதியளிக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்கும். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் மறுசீரமைப்பு செய்வதை அரசு இலக்காகக் கொண்டுள்ளது. இதில் 1,400 திரைப்படங்கள் மற்றும் 1,100 குறும்படங்கள் ஏற்கனவே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. சமீபத்திய கொள்கை முடிவுகள் திரைப்படத் திருட்டைத் தடுக்கும் என்று நம்பிக்கை உள்ளது. திருட்டுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காக சினிமாட்டோகிராஃப் சட்டத்தை மாற்றியமைக்க அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சட்டம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது. விரைவில் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம். இதன் மூலம் திருட்டுத்தனமாக படங்களைக் காட்டும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு நேரடி அதிகாரம் கிடைக்கும். ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறை 2021ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது” என்று கூறினார். நிகழ்ச்சியில் எஃப்.ஐ.சி.சி.ஐ இ.ஒய் மீடியா மற்றும் பொழுதுபோக்கு அறிக்கையை வெளியிட்டார்.