தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா மெணசி கிராம நிர்வாக அலுவலரான (வி.ஏ.ஓ) இளங்கோவுக்கு, அப்பகுதியில் கனிமவளக் கொள்ளை திருடப்படுவதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, இளங்கோ அங்கு விரைந்து சென்றார். அப்போது, குண்டல் மடுவு காளியம்மன் கோயில் அருகே, உளிக் கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று அதிவேகமாக சென்றது. இதைக் கண்ட வி.ஏ.ஓ. இளங்கோ, அந்த டிராக்டரை தடுக்க முயன்றார். அப்போது, அவர் மீது டிராக்டரை ஏற்றிக் கொலை செய்யும் நோக்கில், அவர் மீது மோதுவதுபோல டிராக்டர் நிற்காமல் சென்றது. எனினும், இளங்கோ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர், இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இளங்கோ. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவலர்கள், டிராக்டர் உரிமையாளர் ராகவன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளையை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரி லூர்தூ பிரான்சிஸ் சமூக விரோதிகளால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனால், தங்களது பாதுகாப்பை உறுதிசெய்யவும், தற்காப்பு பயிற்சி அளித்து கைத்துப்பாக்கி வழங்கவும் வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்த சூழலில் தான், தற்போது மற்றொரு வி.ஏ.ஓவை கொல்ல முயற்சி நடந்துள்ளது. இவை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளாவு சீர்குலைந்துள்ளது என்பதை நிரூபிக்கும் விதமாக உள்ளன என தமிழக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.